டிப்பர் லாரி மோதி முதியவர் பலி
திருவரங்குளத்தில் டிப்பர் லாரி மோதி முதியவர் பலியானார்.
டிப்பர் லாரி மோதி பலி
திருவரங்குளம் கிட்டகாட்டில் வசித்து வந்தவர் நடேசன் (வயது 68). இவர் புதுக்கோட்டை நீதித்துறையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று முன்தினம் காலை 11.30 மணியளவில் திருவரங்குளம் கடைவீதியில் இருந்து தனது வீட்டுக்கு நடேசன் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். புதுக்கோட்டை-ஆலங்குடி சாலையை கடந்தபோது அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி ஒன்று மொபட் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த நடேசனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நடேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனை
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேகத்தடை அமைக்க கோரிக்கை
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், திருவரங்குளம் கடைவீதியில் சாலை அகலப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்குள் இதே இடத்தில் 2 விபத்துகள் நடைபெற்று 2 உயிர்கள் பறிபோய் உள்ளது. எனவே இப்பகுதியில் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.