லாரி மீது கார் மோதி முதியவர் பலி
லாரி மீது கார் மோதி முதியவர் பலியானார்.
விபத்து
கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுகா, பொயனப்பாடி வடக்கு தெருவை சோ்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (வயது 40). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு உடல்நலம் சரியில்லாத தனது மகள் சுபிதாவை(7) சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக காரில் புறப்பட்டார். அப்போது அவருடன் மனைவி அருள்ஜோதி, தந்தை தனபால் (75) ஆகியோரும் உடன் சென்றனர். காரை அவரது உறவினர் விஸ்வநாதன் (36) என்பவர் ஓட்டியுள்ளார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, ரஞ்சன்குடி கோட்டை பிரிவு சாலை அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற லாரியின் பின்புறம் கார் எதிர்பாராதவிதமாக மோதியது.
முதியவர் பலி
இதில் கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த அனைவரும் இடிபாடுகளுக்கிடையே சிக்கி படுகாயமடைந்தனர். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் தனபால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விஸ்வநாதன், அருள்ஜோதி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுபிதா மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.