விபத்தில் முதியவர் சாவு
சாத்தூரில் விபத்தில் முதியவர் இறந்தார்.
சாத்தூர்,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா, வெம்பூரை சேர்ந்த சண்முகலட்சுமி (வயது 40). இவருடைய தந்தை சுப்புராஜ் (71). இவர்கள் குடும்பத்தினருடன் சாத்தூர் அருகே உள்ள பெரியஓடைப்பட்டி கிராமத்திற்கு கோவில் விழாவிற்காக வந்திருந்தனர். அப்போது சுப்புராஜ் உறவினருடன் வன்னி விநாயகர் கோவிலுக்கு சென்று விட்டு வந்து கொண்டு இருந்தார். அப்போது நரேன் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் சுப்புராஜ் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சுப்புராஜை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து சண்முகலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.