பாம்பு கடித்து முதியவர் பலி
பாம்பு கடித்து முதியவர் பலியானார்.
அன்னவாசல் அருகே காலாடிப்பட்டிசத்திரத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 73). இவர், சம்பவத்தன்று வீட்டின் பின்புறம் அடுக்கியிருந்த விறகை எடுக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது விறகுக்குள் இருந்த விஷப்பாம்பு ஒன்று கருப்பையாவை கடித்தது. இதையடுத்து அவரது உறவினர்கள் கருப்பையாவை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த கருப்பையா யாரிடமும் சொல்லாமல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டிற்கு வந்த கருப்பையாவுக்கு மீண்டும் உடல்நிலை பாதிப்படைந்தது. இதையடுத்து அவர் மீண்டும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பையா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை முடிவதற்குள் வீடுதிரும்பிய முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.