டாஸ்மாக் கடை அருகே இறந்து கிடந்த முதியவர்


டாஸ்மாக் கடை அருகே இறந்து கிடந்த முதியவர்
x

டாஸ்மாக் கடை அருகே இறந்து கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் உள்ள முதல் டாஸ்மாக் கடையின் அருகே நேற்று மாலை 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை கண்ட டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வந்தவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலை சமத்துவபுரம் அண்ணாமலை நகரை சேர்ந்த தவசீலன் (வயது 70) என்பது தெரியவந்தது. மேலும் அவருக்கு தெய்வக்கண்ணு என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். கீற்று பின்னும் தொழில் செய்து வந்த தவசீலனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் காலை கோவிலுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்ற தவசீலன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் டாஸ்மாக் கடையின் அருகே இறந்து கிடந்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு, உணவு ஏதும் உட்கொள்ளாமல் வெயிலில் நீண்ட நேரம் படுத்திருந்ததால் தவசீலன் இறந்திருக்கலாம்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story