பேரனின் 16 வயது காதலியை அபகரித்த முதியவர் வசியம் வைக்க சென்றபோது கற்பழித்த மந்திரவாதி- 3 பேர் கைது
விக்னேஷ் சிறுமியை மடத்துக்குளத்துக்கு அழைத்து சென்றார். அங்கு விக்னேசின் தாத்தாவான சின்னசாமியின் பாதுகாப்பில் இருவரும் தங்கி இருந்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு இடங்களில் சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமி வீட்டிற்கு வந்தார். மிகவும் சோர்வாக இருந்தார்.
சிறுமி வந்த தகவல் கிடைத்ததும் பொள்ளாச்சி தாலுகா போலீசார் நேரடியாக சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
சிறுமியின் வீட்டின் அருகே உள்ள ஒரு கடையில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்த விக்னேஷ் (20) என்பவர் வேலை பார்த்து வந்தார். அப்போது சிறுமியுடன், விக்னேசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அடிக்கடி அவர் சிறுமியை சந்தித்து பேசி வந்தார். நட்பாக தொடங்கிய இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து விக்னேஷ் சிறுமியை பல்வேறு இடங்களுக்கும் சுற்றுலா அழைத்து சென்றார்.
அப்போது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார். இதனை சிறுமியும் நம்பினார். இதனை கூறியே விக்னேஷ் சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதனால் சிறுமி கர்ப்பம் ஆனார். ஆனால் சிறுமி இதனை வீட்டில் மறைத்துவிட்டார். தனது காதலனிடம் மட்டும் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டதும், விக்னேஷ் அதிர்ச்சியானார். என்ன செய்வது என்று தெரியமால் விழித்த அவர், இதுகுறித்து தனது தாத்தாவான சின்னசாமி என்பவரிடம் தெரிவித்தார். அதற்கு அவர் இதுகுறித்து நீ யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். சிறுமியை அழைத்து கொண்டு வா நான் எல்லாவற்றையும் பார்த்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து விக்னேஷ் சிறுமியை மடத்துக்குளத்துக்கு அழைத்து சென்றார். அங்கு விக்னேசின் தாத்தாவான சின்னசாமியின் பாதுகாப்பில் இருவரும் தங்கி இருந்தனர்.
அப்போது சின்னசாமியும், சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் சிறுமியை தனது கட்டுப்பாட்டில் வைத்துகொள்ளவும், தான் சொல்வதை எல்லாம் சிறுமி செய்ய வேண்டும் என நினைத்த சின்னசாமி, சிறுமிக்கு வசியம் செய்ய முடிவு செய்தார்.
இதற்காக அதே பகுதியை சேர்ந்த மந்திரவாதியான அர்ஜூணன் என்பவரிடம் அழைத்து சென்றார். அப்போது சிறுமி எதற்காக இங்கு அழைத்து வந்தீர்கள் என கேட்டதற்கு உங்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக தான் அழைத்து வந்துள்ளேன் என சின்னசாமி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மந்திராவதி அர்ஜூணன் பல பூஜைகளையும் செய்தார். அப்போது அவரும் சிறுமியிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார்.
உதவி கேட்டு வந்த நமக்கு உதவிசெய்யாமல் அவர்களும் நம்மை மிரட்டி பாலியல் தொல்லை கொடுக்கிறார்களே என்று சிறுமி மனவேதனை அடைந்தார்.
மேலும் தனது காதலனிடமும் தனக்கு நடந்தவற்றை கூறியதுடன், உடனே திருமணம் செய்து கொள்வோம் என கூறினார். இதையடுத்து 2 பேரும் திருமணம் செய்ய முடிவு செய்து பழனிக்கு சென்று, விக்னேசின் உறவினரான ஈஸ்வரன் என்பவர் வீட்டில் தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் சிறுமி அங்கிருந்து தப்பி தனது வீட்டிற்கு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில், பொள்ளாச்சி தாலுகா போலீசார் காதலன் விக்னேஷ், அவரது தாத்தா சின்னசாமி, மந்திரவாதி அர்ஜூணன், இதற்கு உடந்தையாக இருந்த ஈஸ்வரன் ஆகிய 4 பேர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து அவர்களை கைது செய்ய தேடி வந்தனர். இந்த நிலையில் திருப்பூரில் பதுங்கி இருந்த சின்னசாமி, ஈஸ்வரன், மந்திரவாதி அர்ஜூணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். உறவினர்கள் கைது செய்யப்பட்டதை அறிந்ததும் விக்னேஷ் தலைமறைவாகி விட்டார். தொடர்ந்து அவரை போலீசார் தேடி வந்தனர்.
இதற்கிடையே போலீசார் எப்படியும் தன்னை கைது செய்து விடுவார்கள் என்பதால் பயந்து போன விக்னேஷ் சம்பவத்தன்று விஷத்தை குடித்து மயங்கினார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் விக்னேசையும் கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.