ஊசிகளை பிரிக்கும் பணியில் நோயுற்ற முதியவர்: வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் முறையற்ற சிகிச்சையால் நோயாளிகள் கடும் அவதி- உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? -பொதுமக்கள் எதிர்பார்ப்பு


ஊசிகளை பிரிக்கும் பணியில் நோயுற்ற முதியவர்: வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் முறையற்ற சிகிச்சையால் நோயாளிகள் கடும் அவதி- உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? -பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் முறையற்ற சிகிச்சையால் நோயாளிகள் கடும் அவதி அடைந்து உள்ளார்கள். அதனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளார்கள்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் முறையற்ற சிகிச்சையால் நோயாளிகள் கடும் அவதி அடைந்து உள்ளார்கள். அதனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளார்கள்.

அரசு ஆஸ்பத்திரி

ஆனைமலை அருகே வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. ஆனைமலை, ஓடையகுளம், சேத்துமடை, காளியபுரம், சரளைபதி, தம்பம்பதி, சர்க்கார்பதி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து தினசரி 250 பேர் வெளிநோயாளிகளாகவும், 15 பேர் உள்ள நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் முதியவர் பரமசிவம் என்பவர் கை மற்றும் கால் பகுதியில் ஆறாத புண்ணுடன் பல ஆண்டுகளாக மருத்துவமனையில் தங்கி உள்ளார். இவரிடம் அங்குள்ள செவிலியர்கள், நோயாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பிரித்து வைக்கும் பணியை கொடுத்துள்ளனர். நோய்களுக்கு மருத்துவம் பார்க்க வந்த நோயாளிகள் பிற தொற்று நோய்களை வாங்கி செல்லும் அவல நிலை உள்ளது. இதனால் நோயாளிகள் கடும் அவதிப்படுவதோடு பெரும் அச்சத்தில் உள்ளார்கள்.

முறையற்ற சிகிச்சைகள்

மேலும் கிருமி நீக்கம் செய்யப்பட்டு கவர் செய்யப்பட்ட ஊசிகளை நோயாளிகளுக்கு ஊசி போடும் போது மட்டுமே கவர் பிரித்து ஊசி எடுத்து போடுவது வழக்கம். ஆனால் 10 முதல் 20 ஊசிகளை ஒன்றாக கவரை கிழித்து ஒரு டப்பாவில் போட்டு வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. ேமலும் முதியவர் பரமசிவத்திற்கு ஆறாத புண் இருப்பதால் ஊசி பிரிக்கும் போது மற்றவர்களுக்கும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. முறையற்ற வகையில் அரசு ஆஸ்பத்திரிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது பொதுமக்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கூறியதாவது:-

கர்ப்பிணிகள் அவதி

வேட்டைக்காரன் புதூர் அரசு ஆஸ்பத்திரியில் முதியவர் ஒருவர் சுகாதாரமற்ற நிலையில் மருத்துவமனையின் தொற்றுநீக்கம் செய்யப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சர்வ சாதாரணமாக சென்று வருகிறார். ஆஸ்பத்திரியில்வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, முதியவரை கொண்டு ஊசி மற்றும் மருந்துகளை திறந்த வெளியில் வைத்து பிரித்து நோயாளிகளுக்கு பயன்படுத்துவது என்பது நோயாளிகளை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது. இதேபோல் சிகிச்சை வருபவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சைகள் அளிக்கப்படுவது இல்லை. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்காக வரும் போது, நீண்ட நேரம் காக்க வைக்கப்படுகிறார்கள். அதனால் அவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இதனால் தனியார் மருத்துவமனையை தேடிச் செல்லும் நிலை எழுகிறது. அதனால் முதியவருக்கு ஊசி பிரிக்கும் பணியை கொடுத்த செவிலியர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த முதியவரை காப்பகத்தில் சேர்ப்பதோடு, நோயாளிகளுக்கு தகுந்த முறையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து டாக்டர் அழகப்பசாமி கூறுகையில், முதியவர் பரமசிவம் என்பவர் அதிக அளவு புகைப்பிடித்ததால் இவருக்கு ஆறாத புண் நோய் ஏற்பட்டுள்ளது. இவர் 15 ஆண்டு காலமாக மருத்துவமனை சுற்றிய வாழ்ந்து வருகிறார். ஊசி கவர்ர்களை கிழித்த தகவல் தெரிந்ததும் முதியவர் பரமசிவம் மீது கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் முதியவர் ஊசி போடுதல் போன்ற பணிகளை செய்யவில்லை. ஊசி கவர்களை பிரிக்கும் பணியை கொடுத்த செவிலியருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.


Next Story