வீட்டில் தூங்கிய முதியவர் அடித்துக்கொலை


வீட்டில் தூங்கிய முதியவர் அடித்துக்கொலை
x

வேதாரண்யம் அருகே வீட்டில் தூங்கிய முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே வீட்டில் தூங்கிய முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 மனைவிகள்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலத்தை சேர்ந்தவர் ரெத்தினசபாபதி(வயது 82). இவருக்கு அலமேலு, வடுவம்பாள் என்ற 2 மனைவிகள்.

முதல் மனைவி அலமேலுக்கு ஒரு மகனும், 2-வது மனைவி வடுவம்பாளுக்கு ஒரு மகன், 2 மகள்களும் உள்ளனர். இவர்களில் 2 மனைவிகளும், 2-வது மனைவியின் மகனும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர்.

முதியவர் அடித்துக்கொலை

மீதி உள்ள ஒரு மகன் மற்றும் 2 மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் ரெத்தினசபாபதி மட்டும் கருப்பம்புலத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ரெத்தினசபாபதி தனது வீட்டில் தூங்கினார். இரவில் அவரது வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் அவரை அடித்துக்கொன்று விட்டு தப்பி சென்று விட்டனர்.

அக்கம், பக்கத்தினர் பார்த்தனர்

நேற்று காலையில் ரெத்தினசபாபதியின் வீட்டுக்கு அருகில் உள்ள அக்கம் பக்கத்தினர் பார்த்தபோது ரெத்தினசபாபதி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவர்கள் வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தனர். இந்த கொலை தொடர்பாக அக்கம், பக்கத்தினரிடம் விசாரணை நடத்திய போலீசார் பின்னர் ரெத்தினசபாபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

நாகையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் 'துலிப்' வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த வீட்டில் இருந்து ஓடி அருகில் உள்ள கீற்று கொட்டகையில் படுத்துக்கொண்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கொலை நடந்த வீட்டுக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்தனர்.

இதுதொடர்பாக வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் தனியாக இருந்த முதியவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story