முதியவரின் ஏ.டி.எம். கார்டை மாற்றி ரூ.74 ஆயிரம் அபேஸ் செய்த வாலிபர்


முதியவரின் ஏ.டி.எம். கார்டை மாற்றி ரூ.74 ஆயிரம் அபேஸ் செய்த வாலிபர்
x

பொன்னமராவதி அருகே முதியவரின் ஏ.டி.எம். கார்டை மாற்றி ரூ.74 ஆயிரம் அபேஸ் செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை

ரகசிய எண்ணை மாற்றி...

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே பணையப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 69). இவர், பொன்னமராவதியில் உள்ள சந்தைக்கு வந்து விட்டு அங்குள்ள ஸ்டேட் வங்கியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அருகில் இருந்த ஒரு வாலிபரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து, ரகசிய எண்ணை மாற்றி கொடுங்கள், மேலும் ரூ.10 ஆயிரம் எடுத்து கொடுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த வாலிபர் ரகசிய எண்ணை மாற்றியுள்ளார்.

அப்போது, முதியவர் செல்போனுக்கு ஓ.டி.பி. வருவதை பார்த்த அந்த வாலிபர், பணம் வரவில்லை என்று கூறி செல்போனை அவரிடம் கொடுத்து விட்டார். மேலும் முதியவரிடம் மற்றொரு ஏ.டி.எம்.கார்டை கொடுத்து அனுப்பி வைத்தார். பின்னர் இதுகுறித்து கேட்பதற்காக பாண்டியன் ஸ்டேட் வங்கிக்கு சென்றுள்ளார்.

ரூ.74 ஆயிரம் அபேஸ்

இதற்கிடையே கார்டை மாற்றிய அந்த வாலிபர் முதியவர் கார்டு மூலம் ஏ.டி.எம்.மில் ரூ.40 ஆயிரத்தை எடுத்துள்ளார். பின்னர் புதுவளவில் உள்ள ஒரு நகைக்கடையில் ரூ.34,400-க்கு நகை எடுத்துள்ளார். அதற்கு முதியவர் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி அங்குள்ள ஸ்வைப் மிஷினில் பண பரிவர்த்தனையை செய்துள்ளார்.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டேட் வங்கியின் அலுவலகத்திற்கு சென்று ஊழியர்களிடம் கார்டை கொடுத்து பரிசோதித்து பார்த்தார். அப்போது ஊழியர்கள் இது உங்களது ஏ.டி.எம். கார்டு இல்லை என்றும், உங்களது வங்கி கணக்கு எண்ணை சொல்லுங்கள் என்று கூறியுள்ளனர். இதையடுத்து வங்கியில் அவரது கணக்கை சரிபார்த்த போது, ரூ.74 ஆயிரத்து 400 எடுக்கப்பட்டுள்ளது என்றும், ஏ.டி.எம் கார்டை மாற்றி கொடுத்து பணம் எடுத்து சென்றது தெரிய வந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் பாண்டியன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து முதியவரின் ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி பணம் எடுத்த வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

1 More update

Next Story