சாலை விபத்தில் காயம் அடைந்த மூதாட்டி சாவு
சாலை விபத்தில் காயம் அடைந்த மூதாட்டி உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம் சந்திரமனை வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மனைவி மணி(வயது 70). ராஜமாணிக்கம் இறந்து போகவே மணி பெரம்பலூர் மாவட்டம் ஜமீன் ஆத்தூர் வடக்கு தெருவில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 13-ந்தேதி மாலை காட்டிற்கு சென்று விறகு எடுத்துக்கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அரியலூர் மாவட்டம் சேனாதிபதி கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் மகன் சேதுபதி(22) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மணி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மூதாட்டி கீழே விழுந்து உடல் மற்றும் தலை, கை, கால்களில் பலத்த காயம் அடைந்தார். இதை அறிந்த உறவினர்கள் மணியை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.