மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை


மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை
x
தினத்தந்தி 14 May 2023 4:30 AM IST (Updated: 14 May 2023 4:30 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் நகைக்காக மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெண்கள் உள்பட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் நகைக்காக மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெண்கள் உள்பட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மூதாட்டி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடுகபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மனைவி தெய்வானையம்மாள் (வயது 75). கணவர் இறந்து விட்டதால் தனியாக வசித்து வருகிறார். மேலும் பக்கத்து வீட்டில் ஒருவர் வாடகைக்கு குடியிருந்து வருவதாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதை பார்த்த உறவினர் ஒருவர், பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இறந்த மூதாட்டியின் கை, தலை பகுதிகளில் காயம் இருந்ததும், அவர் அணிந்திருந்த நகைகள் காணாமல் போனதும் தெரியவந்தது. இதனால் மூதாட்டி சாவில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

இதைத்தொடர்ந்து உதவி போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டார். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மூதாட்டியின் உடல் மற்றும் வீட்டில் பதிந்திருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

கழுத்தை நெரித்து கொலை

இதையடுத்து மூதாட்டியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே பிரேத பரிசோதனையில் தெய்வானையம்மாள் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் கொலை வழக்காக மாற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் மூதாட்டி கொலையில் 2 பெண்கள் உள்பட 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்து உள்ளது. இதைத்தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் நகைக்காக மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

மேலும் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story