சட்டசபை உரையில் காமராஜர் பெயரை தவிர்ப்பதா?கவர்னரை கண்டித்து, நாடார் அமைப்புகள் போராட்டம்
சட்டசபை உரையில் காமராஜர் பெயரை அவமதித்ததாக கூறி கவர்னரை கண்டித்து, தமிழ்நாடு நாடார் அமைப்புகள் சார்பில் சென்னையில் நேற்று போராட்டம் நடந்தது.
சென்னை,
சட்டசபையில் கவர்னர் உரையின் போது, தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, காமராஜர் பெயரை தவிர்த்துவிட்டதாக கூறி, தமிழ்நாடு நாடார் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நேற்று மாலை போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு தமிழ்நாடு நாடார் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எர்ணாவூர் நாராயணன் தலைமை தாங்கினார்.
இதில் நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் தலைவர் பத்மநாபன், செயலாளர் மாரி தங்கம், அகில இந்திய நாடார் வணிக பேரமைப்பு தலைவர் புழல் தர்மராஜ், செயலாளர் ஆறுமுகநயினார், டி.எஸ்.எஸ். நாடார் ஐக்கிய சங்க தலைவர் மனோகரன், மாத்தூர் நாடார் சங்க தலைவர் துரை, நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன் உள்பட நாடார் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திரும்ப பெற வேண்டும்
போராட்டத்தில், சட்டசபை உரையில் காமராஜர் பெயரை தவிர்த்துவிட்டு உரை நிகழ்த்தியதாக கூறி கவர்னரை கண்டித்தும், அவரை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினார்கள். இதுகுறித்து எர்ணாவூர் நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என்று கவர்னர் மாற்றியிருக்கிறார். தமிழ்நாடு என்ற பெயரை மாற்றுவதற்காக பல தியாகிகள் உயிர் நீத்து இருக்கிறார்கள். சங்கரலிங்க நாடார் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தமிழ்நாடு பெயருக்காக உயிரிழந்தார். அவருடைய கோரிக்கையை ஏற்று, அண்ணா முதல்-அமைச்சராக பதவியேற்றதும், அந்த பெயரை மாற்றினார். அப்படி பெற்ற பெயரை மாற்றுவதற்கு கவர்னர் பிரச்சினை செய்து கொண்டிருக்கிறார்.
அவமதிப்பு
அதேபோல், சட்டசபை உரையில் காமராஜர் பெயரை தவிர்த்து பேசியுள்ளார். அவர் சாதாரண தலைவரா?. தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சியை கொடுத்தவர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் படிக்கவேண்டும் என்று நினைத்தவர். அப்படிப்பட்ட தலைவர் பெயரை சட்டசபையில் புறக்கணித்தது எதற்காக? அதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.
இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் எங்கள் அமைப்பு சார்பில் போராட்டங்கள் தொடர்ந்து நடக்கும். மத்திய அரசு உடனடியாக கவர்னரை திரும்ப பெறவேண்டும். சட்டசபையை கவர்னர் அவமதித்ததை, தமிழ்நாட்டின் 8 கோடி மக்களையும் அவமதித்ததாகவே கருதுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டத்தின் போது, கவர்னர் மாளிகையை நோக்கி செல்ல முயற்சித்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால், அதனை கைவிட்டு, போராட்டத்தை முடித்துக்கொண்டனர்.