திசையன்விளை அருகே ஆம்னி பஸ் சிறைபிடிப்பு
பெண்ணுடன் வந்த குழந்தைகளுக்கு டிக்கெட் கேட்டு நடுவழியில் இறக்கி விட்டதால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் திசையன்விளை அருகே ஆம்னி பஸ்சை திடீரென சிறைபிடித்தனர்
திசையன்விளை:
பெண்ணுடன் வந்த குழந்தைகளுக்கு டிக்கெட் கேட்டு நடுவழியில் இறக்கி விட்டதால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் திசையன்விளை அருகே ஆம்னி பஸ்சை திடீரென சிறைபிடித்தனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
குழந்தைகளுடன் வந்த பெண்
திசையன்விளை அருகே இடைச்சிவிளையைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவருடைய மனைவி சுகன்யா (வயது 33). இவர்களுக்கு 3 வயது, 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் கோவையில் வசித்து வருகின்றனர்.
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவையொட்டி, சுகன்யா தன்னுடைய 2 குழந்தைகள் மற்றும் உறவுக்கார பெண் ஆகியோருடன் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டார். இதற்காக அவர் கோவையில் இருந்து திசையன்விளை செல்லும் ஆம்னி பஸ்சில் நேற்று முன்தினம் இரவில் பயணம் செய்வதற்காக ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தார். தொடர்ந்து அவர்கள் கோவையில் இருந்து ஆம்னி பஸ்சில் திசையன்விளைக்கு புறப்பட்டனர்.
சிறைபிடிப்பு
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள உணவகத்தில் பஸ் நின்றபோது, சுகன்யாவிடம் 2 குழந்தைகளுக்கும் டிக்கெட் எடுக்குமாறு பஸ் கண்டக்டர் அறிவுறுத்தினார். அப்போது சுகன்யா தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதும், குழந்தைகளுடன் அவர்களை பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட்டனர். அப்போது அவர்களின் நிலை அறிந்த சக பயணி டிக்கெட் எடுப்பதற்காக ரூ.600 கொடுத்து உதவினார். இதையடுத்து அவர்கள் பஸ்சில் தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து சுகன்யா செல்போனில் தனது உறவினர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து நேற்று காலையில் திசையன்விளை அருகே சண்முகபுரம் வழியாக வந்த ஆம்னி பஸ்சை சுகன்யாவின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்து திடீரென சிறைபிடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், திசையன்விளை போலீசார் விரைந்து சென்று, இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பஸ் நிர்வாகத்தின் சார்பில் வருத்தம் தெரிவித்ததால் பஸ்சை விடுவித்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.