வாடிப்பட்டி அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதல்; பூ வியாபாரி பலி - 18 பேர் படுகாயம்
வாடிப்பட்டி அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் பூ வியாபாரி பலியானார். 18 பயணிகள் காயமடைந்தனர்.
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் பூ வியாபாரி பலியானார். 18 பயணிகள் காயமடைந்தனர்.
பூ வியாபாரி பலி
நெல்லை மாவட்டம் திசையன்விளையில்் இருந்து கோயம்புத்தூருக்கு நேற்று இரவு ஆம்னி பஸ் 41 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அந்த பஸ்சை தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த ராஜேஷ் (வயது 30) என்பவர் ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை 2 மணிக்கு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் விராலிப்பட்டி மேம்பாலத்தில் சென்றபோது திடீரென முன்னால் நிலக்கரி ஏற்றி சென்ற லாரி மீது பயங்கர சத்தத்துடன் ஆம்னி பஸ் மோதியது.
இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கியது. மேலும் முன்பகுதி சேதம் அடைந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே காமாட்சிபுரத்தை சேர்ந்த பூ வியாபாரி முருகன்(32) பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
18 பேர் படுகாயம்
மேலும் கோவை ஜெகன் (23), சிவா (28), செண்பகராமன் (47), பிரபு (38), சிவக்குமார் (33), பொள்ளாச்சி ராதா (48), ஞானதீபா (16), சுந்தரராஜன் (58), தீபலட்சுமி (70), உடுமலைபேட்டை சாந்தி (34), திருச்செந்தூர் முத்தம்மாள் (53), தூத்துக்குடி நளினி (35), நெல்லை ராதாபுரம் மாசானம் (60), செம்பாலை (34) புதுவை கயல்விழி (48), விழுப்புரம் ரவிந்திரகுமார் (42), நிலக்கோட்டை காந்தி (41), விளாம்பட்டி வினோத்பாபு (20) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து அறிந்த வாடிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.