ஆம்னி பஸ்-லாரி மோதல்; டிரைவர் பலி
ஒட்டன்சத்திரம் அருகே, ஆம்னி பஸ்-லாரி மோதியது. இதில் ஆம்னி பஸ் டிரைவர் பலியானார். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆம்னி பஸ்-லாரி மோதல்
கோவையில் இருந்து தென்காசி நோக்கி, ஒட்டன்சத்திரம் வழியாக தனியார் ஆம்னி பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. அந்த பஸ்சை, தென்காசியை சேர்ந்த காளிதாசன் (வயது 36) ஓட்டினார். நேற்று அதிகாலையில் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில், ஒட்டன்சத்திரத்தை அடுத்த அம்பிளிக்கை அருகே ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவர் மீது ஆம்னி பஸ் மோதியது. இதனையடுத்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், அடுத்த சாலைக்கு சென்றது. அந்த சமயத்தில், தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு புண்ணாக்கு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி மீது, ஆம்னி பஸ் நேருக்குநேர் மோதியது.
டிரைவர் பலி
லாரிக்கு பின்னால், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பஸ் வந்தது. அந்த பஸ், லாரி மீது மோதியது. கண்இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து 3 வாகனங்களும் மோதி விபத்தில் சிக்கின.
இந்த கோர விபத்தில் லாரி மற்றும் ஆம்னி பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. ஆம்னி பஸ் டிரைவர் காளிதாசன், இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
15 பேர் படுகாயம்
மேலும் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த தென்காசியை சேர்ந்த எழில் அரசி (21), கார்த்திக் ராஜா (24), சீதாலட்சுமி (23), மகேஸ்வரி (36), அண்ணாமலை கனி (45), ரம்யா (24), கோவையை சேர்ந்த கணபதி (62), சிவகிரியை சேர்ந்த கணேசன் (42) மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த லாரி டிரைவர் பன்னீர்செல்வம் (37) உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதேபோல் அரசு பஸ்சில் பயணித்த ராமநாதபுரத்தை சேர்ந்த லீலாவதி (57), சிவசங்கரி (24) காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் இவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அம்பிளிக்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.