ஆம்னி பஸ் கவிழ்ந்து சட்டக்கல்லூரி மாணவர் பலி


ஆம்னி பஸ் கவிழ்ந்து சட்டக்கல்லூரி மாணவர் பலி
x

திருச்சி அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து சட்டக்கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

திருச்சி

ஆம்னி பஸ்

சென்னையில் இருந்து தென்காசியை நோக்கி ஆம்னி பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சை விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 38) என்பவர் ஓட்டிச்சென்றார். தேனியை சேர்ந்த கனகராஜ் (50) கிளீனராக சென்றார். இந்த பஸ்சில் 31 பயணிகள் பயணம் செய்தனர். இரவு நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தனர்.

இந்தநிலையில் அந்த பஸ் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் அருகே கள்ளிக்குடி மார்க்கெட் முன்புறம் சென்று கொண்டிருந்தது.

சட்டக்கல்லூரி மாணவர் பலி

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக சென்று தடுப்பு சுவரின் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் காயமடைந்து வலியால் அலறினர். இதனைகண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த பயணிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் பஸ்சின் கடைசி சீட்டில் அமர்ந்து பயணம் செய்த தென்காசி மாவட்டம் இலஞ்சியை சேர்ந்த லெட்சுமிநாராயணன் மகன் சட்டக்கல்லூரி மாணவரான சக்தி விக்னேஷ் (19) என்பவர் பின் படிக்கட்டு வழியாக கீழே விழுந்தார். இதில் அவரது இடதுகால் துண்டானது. இதனைதொடர்ந்து போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது செல்லும் வழியிலேயே சக்தி விக்னேஷ் பரிதாபமாக இறந்தார்.

போக்குவரத்து பாதிப்பு

லேசான காயமடைந்த மற்ற பயணிகள் அனைவரும் சிகிச்சை பின்னர் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மணிகண்டம் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த விபத்தால் நேற்று அதிகாலை சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், விபத்து நடைபெற்ற இடத்தில் மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. அதேபோலத்தான் தென்காசியை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்சும் சாலையில் நேராக சென்று கொண்டிருந்தபோது சாலை பணிக்காக சற்று இடது புறம் திரும்ப வேண்டி இருந்த நிலையில் டிரைவரின் கவனக்குறைவால் பஸ் தடுப்பு சுவரில் மோதி விபத்திற்குள்ளானது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேம்பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறினார்கள்.


Next Story