சங்ககிரி அருகே ஆம்னி பஸ்சில் திருட்டு: மத்திய பிரதேசத்தில் பதுக்கி வைத்திருந்த ரூ.46 லட்சத்து 92 ஆயிரம் மீட்பு கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்


சங்ககிரி அருகே ஆம்னி பஸ்சில் திருட்டு:  மத்திய பிரதேசத்தில் பதுக்கி வைத்திருந்த  ரூ.46 லட்சத்து 92 ஆயிரம் மீட்பு  கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்
x

சங்ககிரி அருகே ஆம்னி பஸ்சில் திருட்டு போன ரூ.46 லட்சத்து 92 ஆயிரம் மத்திய பிரதேசத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதனை போலீசார் மீட்டனர். கொள்ளையர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

சேலம்

சங்ககிரி,

கார்மெண்ட்ஸ் உரிமையாளர்

திருப்பூர் மாவட்டம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த ஜோதிமணி மகன் விஜயகுமார் (வயது 28), சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய தந்தை ஜோதிமணி, கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்கள் இருவரும் தங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் துணிகளை விஜயவாடா, ஐதராபாத் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வது வழக்கம்.

அப்படி வடமாநிலங்களுக்கு சென்று துணிகளை விற்பனை செய்தனர். பின்னர் வசூலான பணம் ரூ.46 லட்சத்து 92 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு கடந்த 18-ந் தேதி ஆம்னி பஸ்சில் திருப்பூருக்கு வந்து கொண்டிருந்தனர். ஆம்னி பஸ், சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில் ஒரு ஓட்டல் முன்பு நிறுத்தப்பட்டது.

பணம் திருட்டு

தங்களிடம் இருந்த பணத்தை பையுடன் பஸ்சின் சீட்டுக்கு அடியில் வைத்து விட்டு ஆம்னி பஸ்சில் இருந்து இறங்கினர். கழிப்பறை சென்று விட்டு மீண்டும் பஸ்சில் ஏறினர். அப்போது பஸ்சில் பணம் வைத்து இருந்த பையை காணவில்லை. இதனால் ஜோதிமணியும், விஜயகுமாரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சங்ககிரி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, தந்தை- மகன் இருவரையும் நோட்டமிட்ட மர்மநபர்கள், பணத்தை திருடி சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.

மத்திய பிரதேசத்தில் விசாரணை

இதுதொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தேவி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண்குமார், ஸ்ரீராம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் அருள்முருகன், சதாசிவம், கருப்புசாமி, ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், மத்திய பிரதேசத்தில் இருந்து வந்த நபர்கள் ரூ.46 லட்சத்து 92 ஆயிரத்தை திருடி சென்றது தெரிய வந்தது. உடனே போலீசார் மத்திய பிரதேசத்துக்கு சென்றனர். அங்கு முகாமிட்டு விசாரணை நடத்தினர்.

பணம் மீட்பு

விசாரணையில், தார் மாவட்டம் மனவார் தாலுகா கேர்வா கிராமத்தில் பப்பு, முஸ்தாக் ஆகியோர் பணத்தை திருடி சென்று பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார், கொள்ளையர்கள் பதுங்கி இருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். ஆனால் கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர். அவர்கள் பதுங்கி இருந்த இடத்தில் ரூ.46 லட்சத்து 92 ஆயிரம் இருந்தது. அதனை போலீசார் மீட்டனர். தொடர்ந்து போலீசார் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். அவர்கள் எங்கு சென்றனர் என்ற விவரம் தெரியவில்லை.

உடனே போலீசார் மீட்கப்பட்ட பணத்துடன் சங்ககிரி வந்தனர். அதனை கோர்ட்டில் ஒப்படைத்து உரியவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. துரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்ட தனிப்படை போலீசாரை, சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் பாராட்டினார்.


Next Story