லாரி மீது ஆம்னி பஸ் மோதல் 2 பேர் பலி
உளுந்தூர்பேட்டையில் லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். 10 பயணிகள் காயமடைந்தனர்
உளுந்தூர்பேட்டை
உருக்குலைந்த ஆம்னி பஸ்
சென்னையில் 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆம்னி பஸ் ஒன்று நேற்று முன்தினம் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்துக்கு புறப்பட்டது. அதேபோல் சென்னையில் 52 எருமை மாடுகளை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலத்துக்கு லாரி ஒன்றும் புறப்பட்டது.
இந்த 2 வாகனமும் இரவு 11.45 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை கடந்து, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தன. அப்போது ஆம்னி பஸ் எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரியின் பின்பகுதியில் மோதியது. இதில் ஆம்னி பஸ்சின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கி உருக்குலைந்து போனது.
2 பேர் பலி
இந்த விபத்தில் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த சென்னை அண்ணாநகரை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியரான அந்தோணிதாசன்(வயது 58), கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு கமலாபாய்(64) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மேலும் ஆம்னி பஸ் டிரைவரான திருநெல்வேலியை சேர்ந்த தவமணி(38) மற்றும் ஆம்னி பஸ்சில் வந்த மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த ராஜன்(30), நாகர்கோவில் பார்த்தசாரதி(39), ஜார்ஜ் முல்லா(41), திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ராஜேஷ் மனைவி அபிஷா(27) உள்பட 10 பயணிகள் காயமடைந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் இந்த விபத்தில் லாரியில் கொண்டு வரப்பட்ட 8 எருமை மாடுகள் செத்தன. மற்ற எருமை மாடுகள் காயமின்றி உயிர் தப்பின. விபத்துக்குள்ளான ஆம்னி பஸ்சையும், லாரியையும் போலீசார் அப்புறப்படுத்தினர். இருப்பினும் இந்த விபத்தினால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.