சாம்பல் புதன்கிழமையையொட்டிகிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
சேலத்தில் சாம்பல் புதன்கிழமையையொட்டி கிறிஸ்வ தேவாலயங்களில் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
சேலம்,
சாம்பல் புதன்கிழமை
கிறிஸ்தவர்களின் கடவுளான இயேசு உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) தவக்காலமாக கடைபிடிக்கப்படுகிறது. அதாவது இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூறும் விதமாக இந்த தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கிறார்கள்.
இந்த தவக்காலத்தின் ஆரம்ப நாள் சாம்பல் புதன், திருநீறு புதன் என அழைக்கப்படுகிறது. இதையொட்டி கிறிஸ்தவ தேவாயலங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படும். இந்த ஆண்டு வருகிற ஏப்ரல் மாதம் 9-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு கிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன்கிழமையான நேற்று தொடங்கியது.
சிறப்பு பிரார்த்தனை
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று சாம்பல் புதன்கிழமையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சேலம் 4 ரோடு அருகேயுள்ள குழந்தை இயேசு பேராலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் சேலம் மறைமாவட்ட ஆயர் அருள் செல்வம் ராயப்பன் கலந்து கொண்டு கிறிஸ்தவர்களின் நெற்றியில் சிலுவை அடையாளமிட்டு ஆசி வழங்கினார். அதன்பிறகு சிறப்பு திருப்பலி நடந்தது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல், ஜான்சன்பேட்டையில் உள்ள அந்தோணியார் ஆலயம், சூரமங்கலம் இருதய ஆண்டவர் ஆலயம், அஸ்தம்பட்டி இம்மானுவேல் ஆலயம், கோட்டை நினைவாலயம், கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கிறிஸ்தநாதர் ஆலயம் உள்பட அனைத்து தேவாலயங்களிலும் சாம்பல் புதன்கிழமையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதைதொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஏப்ரல் மாதம் 6-ந் தேதி புனித வியாழனும், ஏப்ரல் 7-ந் தேதி புனித வெள்ளியும் அனுசரிக்கப்படுகிறது. ஏப்ரல் 9-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.