ஆட்டோ மீதுடிராக்டர் மோதி டிரைவர் பலி
தேனி அருகே ஆட்டோ மீது டிராக்டர் மோதியதில் டிரைவர் பலியானார்.
தேனி அருகே உள்ள குப்பிநாயக்கன்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 43). ஆட்டோ டிரைவர். நேற்று இவர், தனது ஆட்டோவில் தோப்புப்பட்டியில் இருந்து பத்திரகாளிபுரத்திற்கு வந்து கொண்டிருந்தார். சாலிமரத்துப்பட்டி-பத்திரகாளிபுரம் சாலையில் ஒரு தனியார் தோட்டம் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த டிராக்டர் இவரது ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ராஜாவின் மனைவி லலிதா கொடுத்த புகாரின் பேரில் டிராக்டர் டிரைவரான சங்கர பாண்டியன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.