சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சார்பில் 20-ந் தேதி கடை அடைப்பு


சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சார்பில் 20-ந் தேதி கடை அடைப்பு
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகிற 20-ந் தேதி சிறு, குறு நிறுவனங்கள் சார்பில் கடை அடைப்பு நடத்த சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பத்தூர்

சங்க கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட சிறு, குறு தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் வாணியம்பாடியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர்.மனோகரன் தலைமை தாங்கினார். செயலாளர் என்.பூபதி, பொருளாளர் முனீர் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கடந்த 8 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த மின் கட்டணத்தையும் மற்றும் அதைசார்ந்த நிலையான கட்டணத்தையும், உச்சநேரம் பயன்பாட்டு கூடுதல் கட்டணம் என மாற்றி அமைத்து மின்வாரியக் கழகம் கட்டாயப்படுத்தி தொடர் பணம் வசூலித்து வருவதை கண்டித்தும், அதனை திரும்ப பெற வேண்டும்.

கடை அடைப்பு

20 ஆண்டுகளுக்கு மேலாக எம்.எஸ்.எம்.இ. நலவாரியம் அமைக்கும் கோரிக்கை மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை கண்டித்தும், தமிழக அரசால் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சுந்தரதேவன் பரிந்துரை செய்த 50 அம்ச பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

மேற்கண்டவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20-ந் தேதி சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அனைத்தும் திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையில் கடையடைப்பு செய்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் துணைத் தலைவர் கே.சந்திரசேகர், இணை செயலாளர் தீபக், செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், மதுசூதனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story