தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி
தேனி மாவட்ட தீயணைப்பு துறை சார்பில், கொடுவிலார்பட்டி கம்மவார் சங்க கல்லூரி வளாகத்தில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி நடந்தது.
தேனி மாவட்ட தீயணைப்பு துறை சார்பில், கொடுவிலார்பட்டி கம்மவார் சங்க கல்லூரி வளாகத்தில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி நடந்தது. பயிற்சியை மாவட்ட கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மாவட்ட தீயணைப்பு அலுவலர் கல்யாணகுமார் தலைமையில் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமரேசன், தேனி நிலைய அலுவலர் பழனி மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி அளித்தனர்.
வடகிழக்கு பருவமழையையொட்டி மழை வெள்ளம், விபத்து பேரிடர் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்பது, அவர்களுக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். மேலும் மாணவ, மாணவிகளுக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளின் போது பயன்படுத்தப்படும் உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டு அவற்றின் பயன்பாடு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையை விபத்தில்லா தீபாவளியாக கொண்டாடுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் தேனி தாசில்தார் சரவணபாபு, தேனி தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.