நகராட்சி நிர்வாகம் சார்பில் பெரம்பலூரில் மாதம் 2 முறை சிறப்பு தூய்மை பணி தொடக்கம்

நகராட்சி நிர்வாகம் சார்பில் பெரம்பலூரில் மாதம் 2 முறை சிறப்பு தூய்மை பணி தொடங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் குப்பையில்லா நகர்ப்பகுதிகளாக உருவாக்கிட தமிழக அரசு 'என் குப்பை என் பொறுப்பு' என்ற கொள்கையை வெளியிட்டு ஒட்டுமொத்த தூய்மை பணிமேற்கொள்ள உத்திரவிட்டுள்ளது. அதன்படி பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் மாதம் 2 முறை ஒட்டுமொத்த சிறப்பு தூய்மை பணி செய்யும் இயக்கம் தொடக்க நிகழ்ச்சியும், குப்பையில்லாத நகரமாக்கிட நகர்மன்ற கவுன்சிலர்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரை 16-வது வார்டு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே நடந்தது. இதில் நகர்மன்ற (பொறுப்பு) ஆணையர் மனோகர் தலைமையில் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணைத்தலைவர் ஹரிபாஸ்கர், வார்டு கவுன்சிலர் துரை காமராஜ் மற்றும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பன்னீர்செல்வம் மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்கள், தூய்மைப்பணியாளர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.
இதனைத்தொடர்ந்து ஒட்டுமொத்த தூய்மை பணியை நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். அரணாரையில் உள்ள திருவள்ளுவர் தெரு, அறிஞர்அண்ணா தெரு, 17-வது வார்டு பகுதியில் உள்ள நடுத்தெரு, தெற்கு தெரு, ஏ.வி.ஆர். நகர், வடக்கு காலனி மற்றும் கல்யாண் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு கழிவுநீர் கால்வாய்களில் இருந்த அடைப்புகள் சரிசெய்யப்பட்டு ஒட்டுமொத்த தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சுற்றுப்புறச்சூழலை தூய்மையாக பேணிக்காப்பதின் அவசியத்தை வலியுறுத்தி, சமூக விழிப்புணர்வு ஓவியப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டன.