சிவசேனா கட்சி சார்பில் ராஜவாய்க்காலை தூர்வார அனுமதிகேட்டு மனு
தேனி ராஜவாய்க்காலை தூர்வார அனுமதி கேட்டு சிவசேனா கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் குருஅய்யப்பன் தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகனிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், "தேனி நகரில் கனமழை பெய்யும்போது மழைநீர் வெளியேற வழியின்றி நகரில் தேங்குகிறது. எதிர்காலத்தில் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழாத நிலை ஏற்படும் வகையில் ராஜவாய்க்காலை தூர்வார வேண்டும். இந்த வாய்க்காலை சிவசேனா கட்சியினரும், தன்னார்வலர்களும் ஒருங்கிணைந்து தூர்வார அனுமதி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறப்பட்டு இருந்தது.
அதுபோல், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட துணைச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நிர்வாகிகள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகனிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், "தமிழகம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஊர்வலம் நடத்த ஐகோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. இதனால் தமிழக போலீஸ் துறையும் அனுமதி கொடுத்துள்ளது. இந்த ஊர்வலம் நடத்துவதால் தமிழகத்தில் சட்டம்ஒழுங்கு சீர்கெட வாய்ப்புள்ளது. எனவே, இந்த ஊர்வலத்தை நடத்த அனுமதி அளிக்கக்கூடாது" என்று கூறப்பட்டிருந்தது.