தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ரூ.2 கோடியில் வணிக வளாகம் திறப்பு
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ரூ.2 கோடியில் வணிக வளாகத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள வணிக வளாகத்தை கனிமொழி எம்.பி நேற்று காலை திறந்து வைத்தார்.
வணிக வளாகம்
தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 3 இடங்களில் ரூ.10 கோடியே 11 லட்சம் செலவில் வணிகவளாகம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் தச்சர் தெருவில் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள வணிக வளாகம் திறப்பு விழா மற்றும் அந்த வணிக வளாகத்தில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள மகளிர் குழுவினரால் அமைக்கப்பட்டு உள்ள பாரம்பரிய ஓலைப்புட்டு உணவகம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு புதிய வணிக வளாகம் மற்றும் ஓலைப்புட்டு உணவகத்தை திறந்து வைத்து பேசினார்.
வாய்ப்பு
அப்போது, இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழகஅரசு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ச்சியாக அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இலங்கையில் இருக்கக் கூடியவர்களுடன் நமக்கு உறவு இருந்தாலும், அவர்கள் பேசக்கூடியமொழி, உணவு ஒன்றாக இருக்கும். ஆனால் கொஞ்சம் வேறுபட்டு இருக்கும். இந்த வித்தியாசமான உணவை மக்களுக்கு அளிக்கும் வகையில் உணவகம் அமைக்க முடிவு செய்தோம். அதன்படி ஓலைப்புட்டு உணவகம் திறக்கப்பட்டு உள்ளது. உணவு தரமாகவும், சுவையாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். நீங்கள் தன்னம்பிக்கையோடு இந்த உணவகத்தை நடத்தவேண்டும். இதே போன்று தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் திறமையோடும் ஆர்வத்தோடும் இது போன்ற வாய்ப்புகளை பெறுவதற்கு தயார் நிலையில் உள்ளனர். இந்த உணவகத்தில் எங்களது சிறப்பான செயல்பாடுகள் மற்ற மகளிர் குழுக்களுக்கும் சிறப்பான வழிகாட்டுதலாக அமையும். உங்களது வெற்றி குடும்பம், குழந்தைகளின் சுய சார்பையும் வாழ்க்கை மேம்பாட்டையும் உறுதிப்படுத்தி உள்ளது என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பு வளன், ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக்கழகம் நிறுவனர் சா.செ.சந்திரகாசன், தாசில்தார் செல்வக்குமார், மாநகர செயற்பொறியாளர் அசோகன், உதவிசெயற்பொறியாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.








