திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில்வாகன ஓட்டிகளை குழப்பும் கி.மீ. அறிவிப்பு பலகைகள்
நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள கி.மீ. அறிவிப்பு பலகைகளில், ஊருக்கு ஊர் மாறுபடும் வகையில் தூர இடைவெளி குறிப்பிடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர்.
திண்டுக்கல்-குமுளி சாலை
திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டன. பின்னர் விரிவாக்கப்பட்ட சாலையாக அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகளின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளன. இந்த சாலையில் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு இடையிலான தூர இடைவெளி குறித்த அறிவிப்பு பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் சாலையோரமும், சில இடங்களில் சாலையின் மையப் பகுதியில் உயரமான ஆர்ச் வடிவத்திலும் அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன.
அதில் திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கான தூர இடைவெளி குறித்த விவரங்கள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக பல அறிவிப்பு பலகைகளில் திண்டுக்கல், மதுரை மாவட்டங்களின் பெயர்கள் அருகருகே இடம் பெற்றிருக்கும் நிலையில் அவற்றின் கி.மீ. தூர இடைவெளி குறித்த தகவல்கள் ஊருக்கு ஊர் மாறுபட்ட நிலையில் உள்ளது. இது வாகன ஓட்டிகளை குழப்பும் வகையில் உள்ளது.
மாறுபடும் கி.மீ.
உதாரணத்துக்கு உத்தமபாளையம், சின்னமனூர், வீரபாண்டி பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகைகளை பார்க்கும் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர். உத்தமபாளையத்தில் புறவழிச்சாலையில் உள்ள ஆர்ச் பலகையில் திண்டுக்கல் 103 கி.மீ., மதுரை 104 கி.மீ. என்று உள்ளது. அதில் திண்டுக்கல்லை விட மதுரைக்கு 1 கி.மீ. அதிக தூரம் என்று உள்ளது. அதை கடந்து சின்னமனூர் ஊருக்குள் நுழையும் பகுதியில் உள்ள பலகையில் திண்டுக்கல் 98 கி.மீ., மதுரை 100 கி.மீ. என்று உள்ளது. அதில், திண்டுக்கல்லை விட மதுரைக்கு 2 கி.மீ. தூரம் அதிகம் என்று உள்ளது.
சின்னமனூர் ஊருக்குள் இருந்து வெளியேறி புறவழிச்சாலை சந்திக்கும் பகுதியில் உள்ள ஆர்ச் பலகையில் திண்டுக்கல் 94 கி.மீ., மதுரை 95 கி.மீ. என்று உள்ளது. அதில், மீண்டும் மதுரைக்கு 1 கி.மீ. தூரம் அதிகம் என்று வருகிறது. அதுவே வீரபாண்டி புறவழிச்சாலையில் உள்ள பதாகையில் திண்டுக்கல் 84 கி.மீ., மதுரை 81 கி.மீ. என்று உள்ளது. அதுவரை மதுரைக்கு அதிக தூரம் என்று இருந்த நிலையில், வீரபாண்டி புறவழிச்சாலையில் உள்ள அறிவிப்பு பலகை மதுரையை விட திண்டுக்கல்லுக்கு 3 கி.மீ. அதிகம் என்று உள்ளது.
வாகன ஓட்டிகள் குழப்பம்
இதற்கு இடையே உப்பார்பட்டி சுங்கச்சாவடி அருகில் திண்டுக்கல், மதுரை ஆகிய 2 ஊர்களுக்கும் தலா 86 கி.மீ. என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல் மற்ற ஊர்களுக்குமான இடைவெளியும் மாறுபட்டு உள்ளது. இந்த குளறுபடியால் எது சரியான தூரம் என்பதை தெரிந்து கொள்ள முடியாமல் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர். எனவே இந்த அறிவிப்பு பலகைகளில் உள்ள குளறுபடிகளை சரி செய்து சரியான தகவல்கள் இடம் பெறும் வகையில் திருத்தி அமைக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.