அறுவடை எந்திர உரிமையாளர்கள் மீது புகார் தெரிவிக்கலாம்


அறுவடை எந்திர உரிமையாளர்கள் மீது புகார் தெரிவிக்கலாம்
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 3:14 PM IST)
t-max-icont-min-icon

அறுவடை எந்திர உரிமையாளர்கள் மீது புகார் தெரிவிக்கலாம்

நாகப்பட்டினம்

கூடுதலாக வாடகை கேட்கும் அறுவடை எந்திர உரிமையாளர்கள் மீது புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அறுவடை எந்திரங்கள்

நாகை மாவட்டத்தில் தனியார் அறுவடை எந்திரங்களுக்கான வாடகையினை முறைப்படுத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து விவசாயிகளால் வலியுறுத்தப்பட்டு வந்தது. தொடர்ந்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், வேளாண் சார்ந்த அலுவலர்கள், தனியார் அறுவடை எந்திரங்களின் உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் ஒருங்கிணைந்த முத்தரப்பு கூட்டம் நடத்தி விவாதிக்கப்பட்டு பெல்ட் டைப் அறுவடை எந்திரங்களுக்கான ஒரு மணி நேரத்திற்கு வாடகை ரூ.2 ஆயிரத்து 400-ம், டயர் டைப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ரூ.ஆயிரத்து 700-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நிர்ணயம் செய்யப்பட்ட தொகைக்கு கூடுதலாக அறுவடை எந்திர உரிமையாளர்கள் வாடகை கேட்டால் தாசில்தார்கள், வேளாண் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களுக்கு புகார் தெரிவிக்கலாம்.

குறைந்தபட்ச வாடகை

மேலும் வேளாண் பொறியியல் துறை அறுவடை எந்திரங்களுக்கு பெல்ட் டைப் அறுவடை எந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு வாடகை ரூ.ஆயிரத்து 880-ம், டயர் டைப் அறுவடை எந்திரங்களுக்கு வாடகை ரூ.ஆயிரத்து 160 என்று நிர்ணயம் செய்து அரசால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. நடப்பு சம்பா வேளாண் பணிகளுக்கு தேவையான டிராக்டரில் பொருத்தக்கூடிய வைக்கோல் கட்டு கட்டும் கருவிகள், கேஜ்வீல், சுழல் கலப்பை, கொத்துக்கலப்பை போன்ற அனைத்து கருவிகளுடன் கூடிய உழுவைகள் ஒரு மணி நேரத்திற்கு ரூ.500 என்ற குறைந்தபட்ச வாடகை நிர்ணயித்து விவசாயிகளுக்கு வழங்கிட வேளாண் பொறியில் துறையில் தயார் நிலையில் உள்ளது.

உழவன் செயலி

நாகை மாவட்ட விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவோ அல்லது உதவி செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, சாமந்தான்பேட்டை, நாகை அலுவலகத்தில் விண்ணப்பித்து, குறைந்தபட்ச வாடகையில் வேளாண் பொறியியல் துறை எந்திரங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story