போலீசாரை கண்டதும் நாட்டு துப்பாக்கியை புதரில் வீசி சென்ற ஆசாமிகளால் பரபரப்பு
ஆரம்பாக்கம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் தாங்கள் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை புதரில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பாக்கம்,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே நாயுடுகுப்பம் கிராமம் உள்ளது. இது தமிழக-ஆந்திர எல்லைப்பகுதி ஆகும். அந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்த 3 மர்ம ஆசாமிகள் போலீசாரை கண்டதும் திக்குமுக்காடி பயந்து பதுங்கினர். மேலும் தங்கள் வசம் இருந்த ஒரு பையை அருகே இருந்த புதரில் வீசிவிட்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர்.
நாட்டு துப்பாக்கி சிக்கியது
போலீசார், புதரில் வீசப்பட்ட பையை எடுத்து சோதனை செய்த போது அதில் ஒரு பழைய நாட்டு துப்பாக்கி, அதற்கான இடுபொருட்கள் இருந்தன. முயல் மற்றும் கொக்கு போன்ற பறவைகளை வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கியை அவர்கள் கொண்டு வந்திருக்கலாம் என தெரிகிறது.
போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் தலைமறைவான செயல் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதால் நாட்டு துப்பாக்கியை வேறு ஏதேனும் அசாம்பாவித செயலுக்கு பயன்படுத்த அவர்கள் கொண்டு வந்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசாா் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.