2-வது நாளாக நடந்தது வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணி


2-வது நாளாக நடந்தது வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணி
x

வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் -சின்னம் பொருத்தும் பணி 2-வது நாளாக நேற்று நடந்தது.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் உள்ளன. தற்போது 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தலா 16 வாக்காளர் பெயர், சின்னம் பொருத்தலாம். இவ்வாறாக, நோட்டாவுடன் சேர்த்து, 78 பதிவுக்கு இடம் ஒதுக்கப்படும்.

இதனால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், 1 கட்டுப்பாட்டு எந்திரம், 1 வி.வி.பேட் பயன்படுத்தப்படும். அதன்படி 286 கட்டுப்பாட்டு கருவி, 310 வி.வி.பேட், 1,144 மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. அவசிய பயன்பாட்டுக்காக மொத்தம் 1,430 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

நோட்டா

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இந்த எந்திரங்களில், நேற்று முன்தினம் முதல் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடக்கிறது. 77 இடங்களில் வேட்பாளர் பெயர் சின்னமும், 78-வது இடத்தில் நோட்டாவும், அதற்கான சின்னம் உள்ள இடத்தில் வெள்ளை நிறமாக விடப்படும். 79, 80 ஆகிய இடங்களில் அழுத்த முடியாத பொத்தான் பொருத்தப்படும்.

ஒவ்வொரு ரவுண்டிலும் தலா 20 வாக்குச்சாவடிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திலும் வாக்குப்பதிவு சீட்டு பொருத்தப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 9 மணி வரை, 60 வாக்குச்சாவடிக்கான எந்திரங்களில் ஒட்டும் பணிகள் நிறைவடைந்தது. அவற்றை ஒட்டியதுடன், பதிவு செய்து சரியாக பதிவாகிறதா என்பதை உறுதி செய்து, 'சீல்' வைத்தனர். இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக காலை 9 மணி முதல் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அனைத்து பணிகளும் இரவில் நிறைவடைந்து விடும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story