புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி  பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

தேனி

2-வது சனிக்கிழமை

புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி இன்று கம்பத்தில் உள்ள கம்பராயப் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

பின்னர் கம்பராயப் பெருமாள் துளசி மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பஜனை பாடல்கள் பாடி வழிபாடு செய்தனர். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கம்பம் வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சப்பரத்தில் வீதி உலா வந்தார். அப்போது பக்தர்கள் உற்சாகமாக ஆடி, பாடினர்.

சிறப்பு வழிபாடு

பெரியகுளம் தென்கரையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பின்னர் வரதராஜ பெருமாளுக்கு திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரமும், உற்சவருக்கு ராமர் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. இந்த வழிபாட்டில் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தென்கரை பகுதியில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ணருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தெற்கு அக்ரகாரத்தில் உள்ள நாமத்தவார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணர்- ராதைக்கு துளசியால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் கூட்டுப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜையில் பங்கேற்றவர்களுக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

போடி சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இதில் பெருமாள், வைகுண்ட நாதர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். உப்புக்கோட்டை வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அதில் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன், திருப்பதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.


Next Story