மாவட்டம் தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டுதூத்துக்குடி குறித்த புதிய பாடல் வெளியீடு
மாவட்டம் தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு தூத்துக்குடி குறித்த புதிய பாடல் வெளியிடப்பட்டது.
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு 1986-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி புதிய மாவட்டமாக உருவானது. தூத்துக்குடி மாவட்டம் உருவாகி 37 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மாவட்டத்தின் பெருமைகளை விளக்கும் வகையில் குறும்படத்துடன் கூடிய புதிய பாடல் வெளியிடப்பட்டு உள்ளது.
ஸ்டெர்லைட் காப்பர், தூத்துக்குடி ஒப்பந்த காரர்கள் சங்கம், தொழிற்சாலைகளுக்கான விநியோகஸ்தர்கள் சங்கம், தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் உதவியுடன் பாடல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பாடலை ஆனந்த் மற்றும் கார்த்திக் ஆகியோர் பாடி உள்ளனர். 'உப்பு காத்து வீச' என தொடங்கும் இந்த பாடலில் உப்பு உற்பத்தி, மீன்பிடித் தொழில், பனைமரத் தொழில், பனிமயமாதா ஆலயம், திருச்செந்தூர் கோயில், முக்கிய பள்ளிவாசல்கள் போன்றவை இடம் பெற்று உள்ளன. மேலும், கட்டபொம்மன், வ.உ. சிதம்பரனார், பாரதியார் போன்ற தேச தலைவர்களையும் நினைவு கூறும் வகையில் பாடல் காட்சிகள் இடம் பெற்று உள்ளன. கொரோனா காலத்தில் தூத்துக்குடியில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு பல மக்களை காப்பாற்றியதையும் நினைவு கூறப்பட்டு உள்ளது. 3 நிமிடங்கள் 44 நொடிகள் ஓடக்கூடிய இந்த பாடல் நம்ம தூத்துக்குடி என்ற செல்பி பாயிண்ட் முன்பு நிறைவடையும் வகையில் காட்சிகள் அமைந்து உள்ளன. சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.