வீட்டில் தூங்கிய மூதாட்டி முகத்தில் தலையணையால் அழுத்தி நகை பறிப்பு


வீட்டில் தூங்கிய மூதாட்டி முகத்தில் தலையணையால் அழுத்தி நகை பறிப்பு
x
தினத்தந்தி 4 Feb 2023 12:15 AM IST (Updated: 4 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி அருகே வீடு புகுந்து தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி முகத்தில் தலையணையால் அழுத்தி 5½ பவுன் தங்கச்சங்கிலியை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தென்காசி

தென்காசி அருகே வீடு புகுந்து தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி முகத்தில் தலையணையால் அழுத்தி 5½ பவுன் தங்கச்சங்கிலியை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மூதாட்டி

தென்காசி மாவட்டம் மேலகரம் அருகே உள்ள நன்னகரம் இந்திரா காலனி பகுதியை சேர்ந்த காசிநாதன் என்பவரது மனைவி சொர்ணம் (வயது 73). இவர் தனியாக வசித்து வருகிறார்.

இவருக்கு 3 மகன்கள் உண்டு. அவர்கள் பெங்களூரு, சென்னை, நாகர்கோவில் பகுதிகளில் உள்ளனர்.

நகை பறிப்பு

நேற்று முன்தினம் இரவு மூதாட்டி சொர்ணம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இவரது வீட்டின் அருகில் உள்ள ஒரு பெண் இவரது செல்போனை வாங்கி பேசுவது வழக்கம். அவ்வாறு இரவில் செல்போனை வாங்கிய அந்த பெண் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. அவர் வருவார் என்று எதிர்பார்த்து சொர்ணம் கதவை திறந்து போட்டு தூங்கி விட்டார்.

நேற்று அதிகாலை அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், மூதாட்டி சொர்ணம் முகத்தில் தலையணையால் அழுத்தி கழுத்தில் கிடந்த 5½ பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. கொள்ளை போன தங்க நகையின் மதிப்பு ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் என கூறப்படுகிறது.

மோப்ப நாய்

இதுகுறித்து குற்றாலம் போலீசில் சொர்ணம் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர்.

அங்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து கொள்ளை நடந்த வீடு இருந்த தெருவுக்குள் சென்ற பின்னர் மெயின் ரோட்டிற்கு வந்து, மீண்டும் அதே தெருவுக்குள் சென்று நின்று கொண்டது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்

இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story