ஆடிப்பூர விழாவை முன்னிட்டு காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்ட கோவில்களில் பால்குட ஊர்வலம்


ஆடிப்பூர விழாவை முன்னிட்டு காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்ட கோவில்களில் பால்குட ஊர்வலம்
x

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்ட கோவில்களில் ஆடிப்பூர விழாவையொட்டி பால்குட ஊர்வலம் நடந்தது.

காஞ்சிபுரம்

குன்றத்தூர்,

குன்றத்தூரில் புகழ்பெற்ற தேவி பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஆடிப்பூரத்தையொட்டி பால்குட ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை குன்றத்தூரில் உள்ள திருநாகேஸ்வர சாமி கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் தொடங்கியது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து விட்டு பால்குட ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பின்னர் 1,508 பக்தர்கள் தலையில் பால் குடங்களை சுமந்து கொண்டு சன்னதி தெரு, பெரிய தெரு, சின்ன தெரு, துலுக்க தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சென்றனர். இறுதியாக அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க குன்றத்தூர் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் வெயிலின் தாக்கத்தால் சாலையில் பக்தர்களுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் தண்ணீர் ஊற்றி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த முதுகரை கிராம குளக்கரை அமைந்துள்ள முதுகரை கிராம குலதெய்வமான அமைச்சரமனுக்கு முதுகரை கிராம பக்தர்கள் 1,008 பேர் நேற்று காலை பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். மாலை ஊரணி பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.

விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை முதுகரை கிராம மக்களும், இளைஞர்களும் செய்திருந்தனர்.

ஆடிப்பூரத்தையொட்டி மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் 1,008 கலச அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கோவில் வளாகத்தில் 1,008 கலசங்கள் வைத்து சிறப்பு அபிஷேகமும் கலசங்களுக்கு முன்பு யாகசாலை வளர்த்து சிறப்பு பூஜைகளும், அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story