அம்பேத்கர், கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
தூத்துக்குடி மாவட்டத்தில், அம்பேத்கர், கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பேச்சு போட்டி
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் "நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மாகாந்தி, ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று அரசு அறிவித்து உள்ளது.
அதன்படி 2023-23-ம் நிதியாண்டில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி 1.8.2023 அன்றும், கருணாநிதி பிறந்தநாளையொட்டி 3.8.2023 அன்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டிகள் தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட உள்ளன. பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை நெல்லை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநரும், பள்ளி மாணவர்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் தேர்வு செய்து அனுப்ப உள்ளனர்.
பரிசு
பள்ளி, கல்லூரிப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்டஅளவில் முதல் பரிசுரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் போட்டியில் மட்டும் பங்கேற்ற மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.