ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்


ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி   அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு  திரளான பக்தர்கள் தரிசனம்
x

ஆடி முதல் வெள்ளிக்கிழமை

ஈரோடு

ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

சத்தியமங்கலம்

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இதனால் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். மேலும் நேற்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை என்பதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று அதிகாலை 5 மணி முதல் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். காலை 6 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை வழிபட்டனர்.

அம்மனை தரிசனம் செய்து விட்டு கோவிலில் இருந்து வெளியே வந்த பக்தர்கள் அங்குள்ள குண்டத்தில் உள்ள சாம்பலை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டனர். பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக உப்பு, மிளகு ஆகியவற்றை குண்டம் உள்ள பகுதியில் தூவியும், விளக்குள் ஏற்றியும் அம்மனை தரிசனம் செய்தனர்.

இதையொட்டி சத்தியமங்கலத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

அந்தியூர்

அந்தியூரில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. ஆடி முதல் வெள்ளிக்கிழமையான நேற்று அதிகாலை 5 மணிக்கு இந்த கோவிலின் நடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சந்தன காப்பு மற்றும் மலர்களால் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையொட்டி அந்தியூர், சந்தியபாளையம், பிரம்மதேசம், வெள்ளையம்பாளையம், எண்ணமங்கலம், வெள்ளித்திருப்பூர், ஒலகடம் மற்றும் சுற்றுவட்டார பகதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

இதேபோல் அத்தாணி, ஆப்பக்கூடல் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கோபி

கோபி வடக்கு வீதியில் உள்ள பிரசித்தி பெற்ற பெரம்பலூர் முத்து மாரியம்மன் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. அப்போது அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதையொட்டி அம்மனுக்கு 50 ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்து. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

கோபி கடை வீதியில் உள்ள சாரதா மாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையொட்டி அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு சென்றனர்.

இதேபோல் கோபி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், கொளப்பலூர் பச்சை நாயகி அம்மன் கோவில், அளுக்குளி செல்லாண்டியம்மன் கோவில், காசிபாளையம் கரிய காளியம்மன் கோவில், கோபி புதுப்பாளையம் மகா மாரியம்மன் கோவில், சீதாலட்சுமிபுரம் தண்டு மாரியம்மன் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு கோவில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சென்னிமலை

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சென்னிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் நேற்று காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் சென்னிமலை அருகே உள்ள எக்கட்டாம்பாளையம் மாரியம்மன் கோவில், சொக்கநாதபாளையம் மாரியம்மன் கோவில், வெள்ளோடு மாரியம்மன் கோவில், புதுவலசு மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பவானி

பவானியில் ஆடி வெள்ளியையொட்டி வர்ணபுரத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அப்போது சமயபுரம் மாரியம்மனுக்கு பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

தேவபுரத்தில் உள்ள கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காமாட்சி அம்மன் அலங்காரத்தில் கருமாரியம்மன் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

தாளவாடி

தாளவாடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு நேற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சென்னிமலை

சென்னிமலையில் உள்ள கைலாசநாதர் உடனமர் பெரியநாயகி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கவுந்தப்பாடி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி புது மாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.


Next Story