ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நீலகிரியில், அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்கார பூஜைகள்


தினத்தந்தி 12 Aug 2023 12:15 AM IST (Updated: 12 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நீலகிரியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. பக்தி பரவசத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நீலகிரி

கூடலூர்: ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நீலகிரியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. பக்தி பரவசத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி கடைசி வெள்ளிக்கிழமை

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். மேலும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுவதும் வழக்கம். அதன்படி கடந்த ஜூலை மாதம் 17-ந்தேதி அமாவாசையுடன் ஆடி மாதம் தொடங்கியது. இதைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை, கிருத்திகை உள்பட முக்கிய தினங்களில் அம்மன் மற்றும் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.

நேற்று ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மசினகுடி அருகே பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

108 கிலோ பழங்களால் அலங்காரம்

தொடர்ந்து கூடலூர் நகராட்சிக்குட்பட்ட மேல் கூடலூர் சந்தைக்கடை மாரியம்மன் கோவிலில் காலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் ஆரஞ்சு, ஆப்பிள், கொய்யா உள்பட 108 கிலோ எடை கொண்ட பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். இதேபோல் கூடலூர் அருகே 2-ம் மைலில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பகல் 11 மணிக்கு ஏராளமான பெண்கள் கஞ்சி கலயங்களை சுமந்தவாறு முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து பக்தி கரகோஷமிட்டவாறு கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்களுக்கு கூழ் ஊற்றப்பட்டது.

ஊட்டி மாரியம்மன்

ஊட்டி மாரியம்மன் கோவிலில் நேற்று காலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் நேற்று காலை முதல் மாலை வரை அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து வந்து பெண்கள் சாமி தரிசனம் செய்தனர். உச்சிக்கால பூஜையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். மேலும் கற்பூரம் ஏற்றி மனமுருக பிரார்த்தனை செய்தனர். இதேபோல் பிங்கர் போஸ்ட் மசினி அம்மன் கோவில், முள்ளிக்கொரை சிக்கம்மன் கோவில்,அக்ரஹாரம் பகுதியில் உள்ள துளிர் காத்த அம்மன் கோவில், காந்தல் மூவுலக அரசியம்மன் கோவில், கூடுதல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பிரத்தியங்கரா தேவி கோவில், மஞ்சூர் அம்மன் கோவில், ஆஸ்பத்திரி சாலை பத்ரகாளியம்மன் உள்பட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நேற்று விமர்சையாக நடந்தது. தொடர்ந்து கடைசி ஆடி வெள்ளி என்பதால் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நேற்றுடன் முடித்தனர்.

கோத்தகிரி கடைவீதி மாரியம்மன்

கோத்தகிரி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவிலிலும் ஆடி மாத கடைசி வெள்ளிக் கிழமையையொட்டி காலை 10 மணிக்கு அம்மனுக்கு 108 மகளிர் பங்கேற்ற கனிவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் கோவில் அர்ச்சகர்கள் சக்திவேல், பார்த்திபன், மாரிமுத்து ஆகியோர் ஸ்லோகங்களை உச்சரிக்க, அதனைத் தொடர்ந்து பெண்கள் அதே ஸ்லோகங்களைச் சொல்லிக்கொண்டே தங்களிடமிருந்த குங்குமம் மற்றும் பூக்களை சிறிது சிறிதாக எடுத்து பழவகைகள் மற்றும் விளக்கின் மீது தூவி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டனர். இந்த பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி தலைவர் வடிவேல் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் மகளிர் வழிபாட்டுக் குழுவினர் செய்து இருந்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. மேலும் வீடுகளிலும் அதிகாலையில் வாசல் தெளித்து கோலமிட்டு பூஜை அறையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பெண்கள் வழிபட்டனர்.


Next Story