பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ஈரோடு காவிரி ரெயில்வே பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, ஈரோடு காவிரி ரெயில்வே பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, ஈரோடு காவிரி ரெயில்வே பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
முன் எச்சரிக்கை நடவடிக்கை
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் மாதம் 6-ந்தேதி (அதாவது இன்று) நாடு முழுவதும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க பலத்த பாதுகாப்பு போடப்படுவது வழக்கம். அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவின் பேரில் கடந்த சில நாட்களாக போலீசார் உஷார் படுத்தப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக பண்ணாரி சோதனை சாவடி, எல்லை பகுதியில் உள்ள காரை பள்ளம் சோதனை சாவடி, நொய்யல் ஆற்று சோதனை சாவடி, கருங்கல்பாளையம் சோதனை சாவடி, பவானி லட்சுமி நகர் சோதனை சாவடி என மாவட்டம் முழுவதும் உள்ள 14 சோதனை சாவடிகளில் போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு
பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடமும், வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகமாக வந்து செல்லும் இடமான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரோடு ரெயில் நிலையத்தில் கடந்த சில நாட்களாகவே போலீசார் மெட்டல் டிடெக்டரை பயன்படுத்தி பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து வருகிறார்கள்.
மேலும் ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரியும் நபர்களையும், வடமாநிலத்தவர்களையும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். இதேபோல் ஓடும் ரெயில்களிலும் பாதுகாப்பு பணிக்காக கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு காவிரி ரெயில்வே பாலத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.