பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி ஈத்கா திடலில் சிறப்பு தொழுகை


பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி ஈத்கா திடலில் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 29 Jun 2023 6:45 PM GMT (Updated: 30 Jun 2023 9:42 AM GMT)

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி ஈத்கா திடலில் சிறப்பு தொழுகை நடந்தது.

தூத்துக்குடி

பக்ரீத் பண்டிகை

இறைத்தூதர் இப்ராஹிம் நபி மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த தியாகத்தை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் துல் ஹஜ் மாதத்தின் 10-வது நாளில் தியாகத்திருநாளான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி ஈத்கா திடலில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் தூத்துக்குடி மாநகரில் உள்ள பல்வேறு ஜமாத்துகளை சேர்ந்த இஸ்லாமிய மக்கள் ஈத்கா திடலில் ஒன்று கூடி தொழுகை நடத்தினர்.

குர்பானி

தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் ஆலிம் தலைமையில் தொழுகை நடந்தது. இதில் அன்பு சகோதரத்துவம், உலக அமைதி வேண்டி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். சிறப்பு தொழுகையில், ஜாமியா பள்ளிவாசல் இமாம்கள் சதக்கத்துல்லா, ஷேக் உஸ்மான், மாவட்ட அரசு காஜி முஜிபுர் ரஹ்மான், ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக குழு தலைவர் மீராசா மற்றும் நிர்வாகிகள், இஸ்லாமிய மக்கள் திரளாக கலந்து கொண்டனர். தொழுகைக்கு பின் ஒருவருக்கு ஒருவர் ஆறத்தழுவி வாழ்த்து தெரிவித்தனர்.

இஸ்லாமிய மக்கள் தொழுகையை முடித்து வீடு திரும்பியதும் இறைவனுக்கு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை குர்பானி எனப்படும் புனித பலி கொடுக்கின்றனர். அந்த இறைச்சியில் குறிப்பிட்ட பங்கை உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஏழைகளுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.

கயத்தாறு

கயத்தாறில் முகமது நைனார் ஜூம்மா பள்ளிவாசலில் பக்கீரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று அதிகாலையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தலைமை இமாம் முகமது ஹணிப் தொழுகை நடத்தினார். இதில் ஜமாத் தலைவர் கே. எம்.எஸ்.பீர்முகைதீன், பொருளாளர் ஜாகீர் உசேன், செயலாளர் பீர்முகைதீன் மற்றும் ஜமாத் உறுப்பினர்கள் உள்பட முஸ்லிம்கள் திரளாக கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். இதேபோல் அய்யனார்ஊத்து கிராமத்தில் பக்ரீத் முன்னிட்டு பள்ளிவாசலில் தலைமை இமாம் அப்துல்ரஹீம் சிறப்பு தொழுகை நடத்தினார். இதில் ஜமாத் தலைவர் இக்பால், செயலாளர் சம்சுதீன், பொருளாளர் பதர்தீன உள்பட ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினர். இதேபோல் மானம்காத்த கிராமத்தில் உள்ள பள்ளிவாசலில் பக்ரீத் தொழுகை நடைபெற்றது.


Next Story