சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரம்


தினத்தந்தி 18 Sept 2023 12:15 AM IST (Updated: 18 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்படும். அதன்பிறகு அந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம் ஆகும். இதனால் பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் இன்று (திங்கட்கிழமை) பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.

சிலைகள் பிரதிஷ்டை

இதற்காக பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதில் தூத்துக்குடி தவசு மண்டபத்தில் 9 அடி உயர விசுவரூப விநாயகர் சிலையும், பல்வேறு உயரங்களில் சிலைகளும் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அதே போன்று மக்கள் வீடுகளில் சிறிய விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வது வழக்கம். இதனால் பூஜைக்கான பொருட்களை வாங்குவதற்காக மக்கள் நேற்று மார்க்கெட்டில் குவிந்தனர். அவல், பொரி உள்ளிட்ட பொருட்களையும் வாங்கி சென்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.


Next Story