சதுர்த்தி விழாவையொட்டிவிநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு:ஏராளமான பக்தர்கள் தரிசனம்


சதுர்த்தி விழாவையொட்டிவிநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு:ஏராளமான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 18 Sep 2023 6:45 PM GMT (Updated: 18 Sep 2023 6:45 PM GMT)

சதுர்த்தி விழாவையொட்டி, மாவட்டம் முழுவதும் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தேனி

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் விநாயகருக்கு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஒவ்வொரு கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தேனி பெத்தாட்சி விநாயகர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். தேனி வெற்றிக்கொம்பன் விநாயகர் கோவிலில் விநாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

இரட்டை விநாயகர்

தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையம் முன்பு உள்ள இரட்டை விநாயகர் கோவிலில் இரட்டை விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். தேனி மீனாட்சிசுந்தரேஸ்வரர், கணேச கந்தபெருமாள் கோவில்களிலும் வழிபாடு நடந்தது.

கம்பம் ஆதிசக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் யாகசாலைகள் அமைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவருக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், அரிசி மாவு, திருமஞ்சன பொடி, பஞ்சாமிர்தம், தேன், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பின்னர் விநாயகருக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது. இதையடுத்து அடுக்கு தீபம், நாகதீபம், கும்ப தீபம், சக்கரதீபம், பஞ்சமுக தீபம் உள்ளிட்ட பல்வேறு தீபங்கள் கொண்டு தீபாராதனை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

சிறப்பு அலங்காரம்

கம்பத்தில் கம்பராயப்பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில், கவுமாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில்.வேலப்பர் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில், உத்தமபுரத்தில் உள்ள தங்க விநாயகர் கோவில், மாலையம்மாள்புரத்தில் உள்ள ராஜகணபதி கோவில் உள்ளிட்ட கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் வீடுகளிலும் சிறு சிறு விநாயகர் சிலைகளை வைத்து பெண்கள் பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை படைத்து வழிபட்டனர்.

போடியில் பாலவிநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. பொதுமக்கள் தங்களின் வீடுகளிலும் களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய அளவிலான விநாயகர் சிலைகள், விநாயகர் படங்களை வைத்தும் வழிபாடு நடத்தினர்.


Related Tags :
Next Story