சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகளை விதிமுறைகளை பின்பற்றி பிரதிஷ்டை செய்ய வேண்டும்:போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தல்


தினத்தந்தி 15 Sept 2023 12:15 AM IST (Updated: 15 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகளை விதிமுறைகளை பின்பற்றி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்

கலந்தாய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு விநாயகர் சிலை பிரதிஷ்டை மற்றும் விஜர்சன நிகழ்ச்சியில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் பொறுப்பாளர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி பேசினார்.

10 அடி சிலை

அப்போது, ஏற்கனவே விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகள் வைப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது, சிலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த ஒவ்வொரு சிலைகளுக்கும் 2 தன்னார்வலர்கள் நியமனம் செய்து, சுழற்சி முறையில் அந்தந்த சிலைகளுடன் 24 மணி நேரமும் இருக்குமாறு செய்ய வேண்டும், நிறுவப்படும் சிலையின் உயரமானது அடித்தளத்திலிருந்து மேடை வரை மொத்தம் 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது, சிலை இருக்கும் பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தபட வேண்டும், விநாயகர் சிலைகளை கரைக்க ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது விநாயகர் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும், மைக் செட் வைத்த வாகனம், இதர வாகனம் என எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படாது. இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு எக்காரணத்தைக் கொண்டும் அனுமதி கிடையாது. விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இருக்க வேண்டும். சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் தகரத்திலான ஷெட் அமைத்திருக்க வேண்டும். விநாயகர் சிலை ஊர்வலம் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக சிலையை எடுத்துச் செல்ல வேண்டும், ஊர்வலத்தின் போது பொது அமைதி காத்து பாதுகாப்புடன் செல்ல வேண்டும்.

அனுமதி

விநாயகர் சிலைகள் நிறுவும் இடத்தின் நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட உதவி கலெக்டர் அனுமதி பெற்றிருக்க வேண்டும். தீயணைப்புத்துறை, மின்வாரியம், ஆகியவற்றிடம் இருந்து தடையில்லா சான்றுகள் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரியிடம் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கான படிவங்களை பூர்த்தி செய்து, அதில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை கடைபிடிக்க உறுதியளித்து, அனுமதி பெற்றிருக்க வேண்டும். பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும். மதவாத வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலோ, பிற மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ முழக்கமிடுவதற்கும், கோஷமிடுவதற்கும் எவ்விதத்திலும் இடம் தரக்கூடாது. நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில் எவ்வித அரசியல் கட்சிகள் அல்லது மத ரீதியான தலைவர்கள் ஆகியோருக்கு ஆதரவான பலகைகள், விளம்பரத்தட்டிகள் வைக்கக்கூடாது.

ஒத்துழைப்பு

தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளும், விதிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும், மின்சார சாதனங்கள், பந்தல்கள் அவ்வப்போது கண்காணித்து, விபத்துக்கள் மற்றும் அசம்பாவிதங்கள் நிகழாமல் கவனித்துக் கொள்ள வேண்டும். விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள் மற்றும் கரைப்பிடங்களில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை எனவும், மேலும் விதிமுறைகளை கடைபிடித்து விநாயகர் சதுர்த்தி விழாவை எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சத்தியராஜ் (தூத்துக்குடி நகரம்), மாயவன் (ஸ்ரீவைகுண்டம்), வெங்கடேஷ் (கோவில்பட்டி), லோகேசுவரன் (மணியாச்சி), ஜெயச்சந்திரன் (விளாத்திகுளம்), அருள் (சாத்தான்குளம்), சம்பத் (மாவட்ட குற்றப்பிரிவு) மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், இந்து முன்னணியினர், மாவட்டத்தில் உள்ள விநாயகர் சிலை வைக்கும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story