தீபாவளி பண்டிகையையொட்டி திண்டுக்கல்லில் பூக்கள் விலை உயர்வு: ஒரு கிலோ மல்லிகை ரூ.1,500-க்கு விற்பனை
தீபாவளி பண்டிகையையொட்டி திண்டுக்கல்லில் பூக்கள் விலை உயர்ந்தது. ஒரு கிலோ ரூ.1,500-க்கு விற்பனை ஆனது
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை கடந்த சில நாட்களாக அதிகரித்தது. விற்பனை அதிகரித்ததால் அதன் விலையும் உயர தொடங்கியது. ஏ.வெள்ளோடு, கல்லுப்பட்டி, தாடிக்கொம்பு, ரெட்டியார்சத்திரம், ராஜக்காபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பூக்கள் திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மேலும் இங்கிருந்து திருச்சி, சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று பூக்களின் விலை பலமடங்கு அதிகரித்தது. கடந்த வாரம் ரூ.500-க்கு விற்ற ஒரு கிலோ மல்லிகைப்பூ நேற்று ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்டது. பண்டிகை காலம் என்பதால் பூக்களின் தேவை அதிகரித்தது. இதன் காரணமாகவே அதன் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி ரூ.300-க்கு விற்ற முல்லை பூ ரூ.1,300-க்கும், ரூ.200-க்கு விற்பனையான கனகாம்பரம் ரூ.800-க்கும், ரூ.350-க்கு விற்பனையான ஜாதிப்பூ 850-க்கும் நேற்று விற்பனை செய்யப்பட்டது. இதே போல் மற்ற பூக்களின் விலையும் கடந்த வாரத்தை விட தற்போது அதிகரித்துள்ளது. பூக்களின் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் இன்னும் ஓரிரு நாட்களில் விலை குறைய தொடங்கும். அப்போது கட்டுப்படியான விலை கிடைக்குமா? என்ற சந்தேகம் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.