விநாயகர் சதுர்த்தியையொட்டி 126 இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு


விநாயகர் சதுர்த்தியையொட்டி 126 இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு
x

பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 126 இடங்களில் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பெரம்பலூர்

விநாயகர் சதுர்த்தி

பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 126 இடங்களில் விநாயகர் உருவசிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதன்படி பெரம்பலூர் நகரில் பிரம்மபுரீஸ்வரர் கோவில், கடைவீதியில் தேரடி, காந்திசிலை அருகே உள்ள செல்வவிநாயகர் கோவில், எளம்பலூர் சாலையில் மேட்டுத்தெரு, மேரிபுரம் அருள்சக்தி விநாயகர் கோவில், துறையூர் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்.நகரில் பாலமுத்துமாரியம்மன் கோவில், இந்திராநகர், வடக்குமாதவி சாலையில் சவுபாக்கிய விநாயகர் கோவில், சங்குப்பேட்டை பகுதி, வெங்கடேசபுரம் உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

சிறப்பு அபிஷேகம்

மேலும் தாலுகா அலுவலக சாலையில் உள்ள கச்சேரி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அனுக்கை, கலசபூஜை, மகாகணபதி ஹோமம், திரவியஹோமம் மற்றும் பகலில் அபிஷேகங்கள், மாலையில் விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோவில் விநாயகர் சன்னதி, நான்கு ரோடு அருகே மின்வாரிய குடியிருப்பில் உள்ள விநாயகர் கோவில், தீரன்நகரில் உள்ள அருள்சக்தி விநாயகர்கோவில், சிதம்பரம் நகரில் உள்ள பாலமுத்துகுமாரசாமி கோவில், சிவன் கோவில் பிரகாரத்தில் உள்ள விநாயகர் சன்னதி, கடைவீதியில் உள்ள ராஜகணபதி கோவில் ஆகியவற்றில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிேஷகங்களும், மகாதீப ஆராதனைகளும் நடைபெற்றது.

126 இடங்களில்...

ராஜகணபதி சிலை மூஷிக வாகனத்தில் வைத்து திருவீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். எளம்பலூர் பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் காகன்னை ஈஸ்வரர் கோவிலில் செல்வமகா வெற்றி கணபதிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு மோதகம் மற்றும் கொழுக்கட்டை வழங்கப்பட்டது. மாலையில் உலக நன்மைக்காக 210 சித்தர்கள் யாகம் நடந்தது. எளம்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் அமைந்துள்ள சிங்கவிநாயகா பரமேஸ்வர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில் அறக்கட்டளை தலைவர் சதாசிவம்பிள்ளை தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது.

பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் உள்ள ஸ்ரீமகாலிங்க சித்தர் ஆசிரமத்தின் சார்பில் மகாலிங்க சித்தர்சுவாமி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்திவிழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனைகளும், மகாதீப ஆராதனையும் நடந்தது. மதியம் அன்னதானமும், மாலை சிறப்பு பூஜையும் நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை, ஆலத்தூர், குன்னம் மற்றும் பெரம்பலூர் தாலுகா என மொத்தம் 126 இடங்களில் விநாயகர் சிலைகள் அலங்கரித்து வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

ஊர்வலம்

பெரம்பலூரில் 31-வது ஆண்டு விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் இந்து முன்னணி சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிஅளவில் நடக்கிறது. ஊர்வலத்தை மாநில செயலாளர் திருப்பூர் அண்ணாதுரை தொடங்கி வைக்கிறார். இந்த ஊர்வலம் செல்வவிநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு சங்குப்பேட்டை, கடைவீதி முக்கியவீதிகளின் வழியாக சென்று காந்திசிலையை அடைகிறது. விநாயகர் சிலைகள் அதன்பிறகு திருச்சிக்கு வேன்களில் எடுத்து சென்று காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது என்று இந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story