விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகள், பூக்களை வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்தனர்


விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகள், பூக்களை வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்தனர்
x

விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகள், பூக்களை வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகள், பூக்களை வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்தனர்.

விநாயகர் சதுர்த்தி

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீதி, வீதியாக மற்றும் முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் வழிபடுவார்கள். இதை தவிர வீடுகளில் சிறிய அளவிலான விநாயகரை வைத்து பூஜை செய்வார்கள். கொரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு விநாயகர் சதுர்த்தியையொட்டி வீதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதனால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா களைகட்டி உள்ளது. இதையொட்டி மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இதன் காரணமாக மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.நேற்று மார்க்கெட்டில் பூக்கள் விலை கிலோவுக்கு மல்லிகை பூ ரூ.700 முதல் ரூ.1200 வரையும், செவ்வந்தி ரூ.250 முதல் ரூ.300 வரையும், முல்லை ரூ.700 முதல் ரூ.800 வரையும், ஜாதி முல்லை ரூ.250 முதல் ரூ.300 வரையும், கோழிக்கொண்டை ரூ.20 முதல் ரூ.25 வரையும், செண்டுமல்லி ரூ.40 முதல் ரூ.50 வரையும், அரளி ரூ.250 முதல் ரூ.300 வரையும், சம்பங்கி ரூ.300 முதல் ரூ.350 வரையும், சில்லி ரோஜா ரூ.250 முதல் ரூ.300-க்கும், துளசி ரூ.70-க்கும் விற்பனை ஆனது.

சிலைகள் விற்பனை

ஒசூரில் இருந்து செவ்வந்தியும், பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து செண்டுமல்லி, வாடாமல்லி, கோழிக்கொண்டை ஆகியவை மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதை தவிர தேனி மாவட்டம் நிலக்கோட்டையில் இருந்து மல்லிகை பூ கொண்டு வரப்படுகிறது. வழக்கத்தை கூடுதலாக 2 டன் பூக்கள் கொண்டு வரப்பட்டது. பூக்கள் வரத்திற்கு ஏற்ப விற்பனையும் மும்முரமாக நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்கள், பொறி உள்ளிட்ட பூஜை பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் திரண்டதால் சத்திரம் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. பாலகோபாலபுரம் வீதியில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் சிலைகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகள் ½ அடி முதல் 2½ அடி வரை விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. மேலும் ரூ.150 முதல் ரூ.2 ஆயிரம் வரை சிலைகள் விற்பனை செய்யப்பட்டன. இதற்கிடையில் வெளியூர் களில் இருந்து வண்ண, வண்ண கலரில் சிலைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதால் களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகள் விற்பனை குறைந்ததாக மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.


Next Story