கோபுரம் பாலாலயம் நிகழ்ச்சியையொட்டிசேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை


கோபுரம் பாலாலயம் நிகழ்ச்சியையொட்டிசேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 24 Feb 2023 3:34 AM IST (Updated: 24 Feb 2023 3:48 AM IST)
t-max-icont-min-icon

கோபுரம் பாலாலயம் நிகழ்ச்சியையொட்டி சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.

சேலம்

சேலம்,

கோட்டை மாரியம்மன்

சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சேலம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். கோவில் மண்டபம் பழுதடைந்து காணப்பட்டதால் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ந் தேதி சுற்றுப்பிரகார பரிவார சாமிகளுக்கு பாலாலயம் நடந்தது. அதன்பிறகு மூலவருக்கு 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ந் தேதி பாலாலயம் நடைபெற்றது. ஆனால் திருப்பணிகள் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு, கருவறையை இடிக்கக்கூடாது உள்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. இதனால் திருப்பணிகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

மகா மண்டபம்

தொடர்ந்து 2019-ம் ஆண்டு கும்பாபிஷேக திருப்பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கால் கோவிலில் பணிகள் சரிவர நடைபெறவில்லை. அதன்பிறகு கோவிலில் விமானத்துடன் கூடிய கருவறை மண்டபம் அமைக்கும் பணிகளும், அதன்பிறகு கருங்கல்லால் ஆன மகா மண்டபம் வடிவமைக்கும் பணிகளும் தொடங்கியது.

ஆனால் இதுவரை கோவில் திருப்பணிகள் முழுமையாக முடியவில்லை. இதனால் கோவில் பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் எப்போது நடத்தப்படும் என்று பக்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

பாலாலயம்

இந்த நிலையில், கோட்டை மாரியம்மன் கோவிலில் உள்ள கோபுரத்துக்கு வர்ணம் பூசும் பணி (பாலாலயம்) தொடங்குவதை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை செய்யப்பட்டது.

மேலும், கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதில், கோவில் நிர்வாக அலுவலர் அமுதசுரபி, பூசாரிகள் சிவா என்கிற சிவக்குமார், பிரகதீஸ்வரன், நிர்வாகி சக்திவேல் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பூஜை நடந்தது.

ஆடி திருவிழாவிற்குள்...

இதுகுறித்து கோவில் பூசாரி சிவக்குமார் கூறுகையில், கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக கோபுரத்துக்கு வர்ணம் பூசுவதற்காக தற்போது பாலாலயம் என்ற பெயரில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இந்த ஆண்டு ஆடி திருவிழாவிற்குள் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். ஒருவேளை பணிகள் முடியாவிட்டால் ஆவணி மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்படலாம். கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை காண பக்தர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர், என்றார்.


Next Story