சுதந்திர தினத்தையொட்டிபயணிகளை இலவசமாக ஏற்றிச் சென்ற ஆட்டோ டிரைவர்
சுதந்திர தினத்தையொட்டி பயணிகளை இலவசமாக ஆட்டோ டிரைவர் ஏற்றிச் சென்றார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் டி.வி.டி. காலனியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 44). ஆட்டோ டிரைவரான இவர் ஆண்டுதோறும் ராணுவ வீரர்களின் கொடிநாள் நிதிக்காக ஒரு நாள் ஆட்டோ சவாரி மூலம் கிடைக்கும் தொகையை வழங்கி வருகிறார். இந்த நிலையில் சுதந்திர தினமான நேற்று தனது ஆட்டோவின் முன்புறமும், பக்கவாட்டு பகுதிகளிலும் சுதந்திர தின வாழ்த்து வாசகங்களுடன் கூடிய பேனர்களை கட்டி இருந்தார். அதில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று எனது ஆட்டோவில் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து நேற்று காலையில் இருந்து மாலை வரை வடசேரி, கோட்டார், கணேசபுரம், பறக்கை, சுசீந்திரம், வில்லுக்குறி போன்ற பகுதிகளுக்கு மொத்தம் 12 முறை தனது ஆட்டோவில் பயணிகளை இலவசமாக ஏற்றி சென்றுள்ளார். அவரது ஆட்டோவில் இலவசமாக பயணித்த பயணிகள் அவருக்கு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர். இது தொடர்பாக கோபிநாத் கூறுகையில், "நேற்று எனது ஆட்டோவில் பயணித்த பயணிகளிடம் கட்டணம் பெற்றிருந்தால் எனக்கு வருவாயாக ரூ.900 கிடைத்திருக்கும். ஆனால் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் எனது ஆட்டோவில் நேற்று பயணிகளை இலவசமாக ஏற்றி சென்றேன்" என்றார்.
----