சுதந்திர தினத்தையொட்டி குன்னூரில், பழங்கால வாகனங்கள் அணிவகுப்பு
சுதந்திர தினத்தையொட்டி குன்னூரில், பழங்கால வாகனங்கள் அணிவகுப்பு நடந்தது.
குன்னூர்: நாடு முழுவதும் நேற்று 77-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சுதந்திர தினத்தையொட்டி குன்னூரில் உள்ள ஒரு தனியார் அமைப்பு சார்பில் தனியார் மேல்நிலை பள்ளி மைதானத்தில் பழங்கால வாகனங்களின் அணிவகுப்பு நடைபெற்றது. அதாவது வாகனங்களின் அணிவகுப்பில் 1970-ல் இருந்த ஸ்கூட்டர்கள், விஸ்பா, ஜவா, யமஹா மற்றும் நான்கு சக்கர வாகனங்களான 1955-ன் பிளை மவுத் கார், 1951-ன் பியட், கார் வேல் வின்டேஜ், ஷவர்லெட் கார், காண்டசா கார் உட்பட பழங்கால கார்கள் மற்றும் வில்லீஸ் ஜீப்கள் இடம்பெற்றன. இந்த வாகனங்கள், அதன் உரிமையாளர்கள் சார்பில் மைதானத்தில் இயக்கப்பட்டு வலம் வந்தன.
இந்த பழங்காலத்து வாகனங்களின் அணிவகுப்பு, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து பழமை மாறாமல் இன்றளவும் பொலிவுடன் வைத்திருக்கும் வாகன உரிமையாளர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.