மகா தீபத்தையொட்டி போலீசாரின் முழு கட்டுப்பாட்டிற்குள் வந்த திருவண்ணாமலை நகரம்
மகா தீபத்தையொட்டி திருவண்ணாமலை நகரம் போலீசாரின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
மகா தீபத்தையொட்டி திருவண்ணாமலை நகரம் போலீசாரின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
கார்த்திகை தீபத் திருவிழா
திருவண்ணாமலை அருணாசேலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (செவ்வாய்க்கிழமை) கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளதால் மகாதீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் மூலம் திருவண்ணாமலைக்கு வந்து குவிந்து வருகின்றனர். அவர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான சிறப்பு பஸ்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இயக்கப்படுவதால் அந்த பஸ்களும் நிரம்பியவாறு திருவண்ணாமலைக்கு வந்து கொண்டிருக்கின்றன.
இதனையொட்டி திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதையில் நகராட்சித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நெடுஞ்சாலைத் துறையால் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு சாலையின் இரு புறங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கிரிவலப்பாதை அடிக்கடி தூய்மை பணியாளர்களால் தூய்மை செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
12 ஆயிரம் போலீசார்
திருவண்ணாமலை நகருக்கு வரும் 9 இணைப்பு சாலைகளிலும் சோதனை சாவடிகள் அமைத்து உரிய சோதனைக்கு பின்னரே வாகனங்களை போலீசார் நகருக்குள் அனுமதித்த வருகின்றனர்.
தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரம் மற்றும் கோவிலை சுற்றி வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் 4 டி.ஐ.ஜி., 27 போலீஸ் சூப்பிரண்டுகள் என 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நேற்று முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் திருவண்ணாமலை நகரமே போலீசாரின் முழு கட்டுபாட்டிற்குள் வந்துள்ளது.
திருவண்ணாமலை நகரில் எங்கு பார்த்தாலும் பக்தர்களாகவே காட்வசியளிக்கின்றனர். அனைத்து பகுதிகளிலும் போலீசார் பேரிகார்டுகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டுகளில் இருந்தது போன்று தீபத் திருவிழாவின் போது பொதுமக்களுக்கு இடையூறாக போலீஸ் வாகனங்கள் அடிக்கடி சென்று வருவதை தவிர்க்க வேண்டும் என்று தீபத் திருவிழா ஆலோசனை கூட்டத்தின் போது காவல் துறையினருக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கலெக்டர் முருகேஷ் ஆகியோர் தெரிவித்து இருந்தனர்.
ஆனால் நேற்று திருவண்ணாமலை நகரில் எங்கு பார்த்தாலும் போலீசாரின் வாகனங்களே அணிவகுத்து சென்றன. ஒவ்வொரு உயர் அதிகாரிகளின் வாகனங்களின் பின்புறமும் அதிரடிப்படையினர் வாகனங்களும் அதிகவேத்தில் சென்றன. இன்று டிசம்பர் 6-ந் தேதி என்பதால் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு பணி
மேலும் மகா தீபத்திற்கு முந்தைய நாளிலேயே திருவண்ணாமலை நகர சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக இருசக்கர வாகனங்களில் சென்று வர முடியாத அளவிற்கு ஆங்காங்கே தடுப்பு அமைக்கப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர். கிரிவலப்பாதையிலும் தொடர்ந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.