மகாளய அமாவாசையையொட்டி சுருளி அருவியில் குவிந்த பக்தர்கள்: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்


மகாளய அமாவாசையையொட்டி  சுருளி அருவியில் குவிந்த பக்தர்கள்:  முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்
x

மகாளய அமாவாசையையொட்டி சுருளி அருவியில் பக்தர்கள் குவிந்தனர். மேலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

தேனி

சுருளி அருவி

கம்பம் அருகே சுருளி அருவி உள்ளது. இந்த அருவி சிறந்த சுற்றுலா தலமாகவும், புண்ணிய தலமாகவும் விளங்குகிறது. இந்த அருவிக்கு ஹைவேவிஸ் மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இதற்கிடையே மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அருவிக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதனால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த மாதம் 2-ந்தேதி முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதற்கிடையே மாவட்டத்தில் மழைப்பொழிவு குறைந்ததால் நீா்வரத்து சீரானது. இதனால் அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

அதன்பேரில் இன்று முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இதையடுத்து இன்று மகாளய அமாவாசையையொட்டி அருவியில் பக்தர்கள் குவிந்தனர். அவா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அருவியில் புனித நீராடினர். பின்னர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

மேலும் அங்குள்ள சுருளி வேலப்பர், விபூதி குகை கோவில், சுருளி ஆண்டவர், ஆதி அண்ணாமலையார் ஆகிய கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். அப்போது பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்த ஏராளமான பக்தா்கள் குவிந்தனர். இதையொட்டி அருவியில் உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா தலைமையில் ஏராளமான போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story