மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் நினைவு தினத்தையொட்டி: தாமிரபரணியில் திருமாவளவன் அஞ்சலி


மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் நினைவு தினத்தையொட்டி: தாமிரபரணியில் திருமாவளவன் அஞ்சலி
x

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் நினைவு தினத்தையொட்டி, தாமிரபரணியில் .திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.

நெல்லை,

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் நினைவு தினத்தையொட்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று நெல்லை தாமிரபரணி ஆற்றில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் குகி உள்ளிட்ட பழங்குடியின மக்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலைக்கு மத்திய, மாநில பா.ஜனதா அரசுகள்தான் காரணம். இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று பிரதமரும், உள்துறை மந்திரியும் பதவி விலக வேண்டும்.

பெண்களை நிர்வாணப்படுத்திய கொடுமை நடந்து 2 மாதங்கள் ஆகியும் பா.ஜனதா அரசு இந்த சம்பவத்திற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காதது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே மணிப்பூர் முதல்-மந்திரி பைரோன் சிங்கை குற்ற வழக்கில் சேர்த்து கைது செய்ய வேண்டும்.

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து, எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி சார்பில் இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரவிகுமார் எம்.பி. பங்கேற்பார். மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மதுரையில் எனது தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

அம்பேத்கர் உருவப்படம்

நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் உருவப்படம் அல்லது சிலை தவிர வேறு படங்கள், சிலைகளுக்கு அனுமதி கிடையாது என உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அம்பேத்கர் படத்தை அகற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் விரைவில் போராட்டம் நடத்தப்படும்.

தமிழகத்தில் சமூக பதற்றம் மற்றும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும் உள்நோக்கத்தில் என்.ஐ.ஏ. சோதனை என்ற முறையை பா.ஜனதா கையாண்டு வருகிறது. நெல்லையில் எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் முபாரக் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனையை நடத்தி அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

திசை திருப்பும் நோக்கம்

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பு செய்வதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய பங்கு வகிப்பதால், அவர் மீது பிரதமர் மோடி மிகவும் கோபத்தில் உள்ளார்.

பா.ஜனதா கட்சி தி.மு.க. அரசை கண்டித்து நடத்தும் போராட்டம் வேடிக்கையாக உள்ளது. மணிப்பூர் சம்பவத்தை திசை திருப்பும் நோக்கிலும், இந்தியா கூட்டணி வலுப்பெற்று விடக்கூடாது என்பதற்காகவும் பா.ஜனதா போராட்டம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story